மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருவதால், பென்டகன் மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புக்களை அனுப்பு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்க இராணுவப் படையெடுப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும், போர் வாரக்கணக்கில் நீடிக்கும் என்றும் நேற்று எச்சரித்திருந்தார்.
இந்தப் பின்புலத்திலேயே கூடுதல் துருப்புக்களை அனுப்புவது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உறுதிப்படுத்தல்கள் வெளியாகியுள்ளது.
துருப்புக்களுடன் போர் விமானங்களும் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் துருப்புக்கள் அனுப்பப்படுவது குறித்த விவரங்களை அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக வெளியிடவில்லை.
இருப்பினும், அத்தகைய சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் கூறியுள்ளார்.
“தொடக்கத்திலிருந்தே நான்கு அல்லது ஐந்து வாரங்கள் ஆகும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அதை விட காலம் நீடிக்கும்,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் மூன்று நாட்களில் ஈரானில் ஆயிரக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய கிழக்கு நாடுகளிலும், மேற்குக் கரையிலும் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பரவலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் F-15 ரக போர் விமானங்கள் மூன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. ஈரானின் பலமும் இந்த போரில் தீவிரமாக உள்ளதால் போர் தற்போதைய சூழலில் நிறைவடைய வாய்ப்பில்லை என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரானின் முக்கிய இலக்குகள் அமெரிக்க தளங்கள் என்றாலும், ஏனைய நாடுகளின் தளங்கள் மீதும் சில ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.
அதேபோல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பல்வேறு அதிரடி தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருவதால் மத்திய கிழக்கு போர் நாளுக்கு நாள் விரிவடைய தொடங்கியுள்ளது.
ஹார்மோஸ் கால்வாய் மூடப்பட்டால் சீனாவுக்கான எண்ணெய் விநியோகம் பாரிய பாதிப்பை சந்திக்கும் என்பதால் இந்த விவகாரத்தில் தற்போது சீனாவும் தலையிட ஆரம்பித்துள்ளது. மறுபுறம் ரஸ்யாவும் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறது.
போர் தொடர்ந்து நீடித்தால் அது மூன்றாம் உலகப் போருக்கான வழியை திறக்கும் என்றும் சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

