2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வியாழக்கிழமை நோர்வேயில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க தைரியமான போராட்டத்தை முன்னெடுத்த பிலிப்பைன்ஸ்யைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸாவுக்கும் ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவுக்கும் விருது பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நோபல் கமிட்டி ‘இவர்கள் இருவரும் தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்குமான பிரதிநிதிகள். ராப்ளர் என்ற செய்தி தளத்தின் துணை நிறுவனரான மரியா ரெஸ்ஸா தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தவும் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தவும் தனது கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தினார்.
நோவாஜா கெஜெட்டா என்ற செய்திதாளின் துணை நிறுவனரான டிமிட்ரி முரடோவ், பல ஆண்டுகளாக ரஷ்யாவில் கருத்து சுதந்திரத்தை அதிக சவாலான சூழ்நிலையில் பாதுகாத்து வந்தவர்’ என்று பாராட்டியுள்ளது.