இலங்கையில் அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

0
26
Article Top Ad

எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார்.

மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த விடுமுறையானது சுகாதாரத் துறை, துறைமுகங்கள், நீர்வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொருந்தாது என அவர் தெளிவுபடுத்தினார்.

அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுமுறை தொடர்பில் தனியார் நிறுவனங்களும் இதே நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கோரப்படுவதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.