அரசுக்குள் பிற்போக்குத்தனமானவர்கள்; வெட்கித் தலைகுனிய வேண்டும்! – பிள்ளையான் சீற்றம்

0
235
Article Top Ad

“அரசுக்குள் பிற்போக்குத்தனமானவர்கள் இருப்பது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல். இப்படியானவர்களின் நடத்தை போலித் தேசியவாதிகளுக்குத் தீனிபோடும் செயலாகும்.”

– இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்த நடத்திய அநாகரிகச் செயல் தொடர்பில் எமது செய்திச்சேவைக்கு அளித்த செவ்வியில் அவர் மேலும் கூறியதாவது:-

“அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்த நடத்திய அநாகரிகச் செயலை நான் வன்மையாகக் கண்டித்திருந்தேன். அரசுக்குள் இப்படியான பிற்போக்குத்தனமானவர்கள் இருப்பது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல். இப்படியானவர்களின் செயல் போலித் தேசியவாதிகளுக்குத் தீனிபோடும் செயலாகும்.

சிறைக் கைதிகளைப் பராமரிக்கும் பொறுப்புக்குக்குரிய இராஜாங்க அமைச்சர் இப்படி நடந்துகொண்டமை மிகக்  கீழ்மட்டமான செயற்பாடு. இதை நான் வன்மையாகக் கண்டித்திருக்கின்றேன். இவ்வாறான செயல் இனிமேல் இடம்பெறக்கூடாது.

இப்படியான அநாகரிகச் செயலைச் செய்பவர்கள் இலங்கைக்குள் இருக்கின்றார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இலங்கையில் பலவிதமான மனிதர்கள் இருக்கின்றார்கள். இப்படியான கீழ்மட்ட செயலைச் செய்ப்பவர்களையும் வாக்குப் போட்டு பாராளுமன்றத்துக்கு மக்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்.

நடந்த சம்பவத்தை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு சிறைச்சாலைப் பொறுப்புக்குரிய இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த விலகியிருந்தார்.

ஜனாதிபதியின் ஏற்பாட்டில் குழு அமைக்கப்பட்டு அநுராதபுரம் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது.

இந்த விடயத்தில் அரசு பக்கச்சார்பின்றி நடக்கும் என நாம் நம்புகின்றோம். இதை நாம் கண்காணித்து வருகின்றோம்” – என்றார்.