மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகள் பிரித்தானிய பொருளாதாரத்தை பல துறைகளில் பாதித்துள்ளன. குறிப்பாக, எரிபொருள் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் காணரமாக பிரித்தானிய பொருளாதாரம் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிசக்தி விலைகளின் திடீர் உயர்வு, எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் அதிகமாக சார்ந்திருக்கும் பிரித்தானியாவுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு எரிபொருள் விலைகளும் தினம் தினம் கணிசமாக உயர்ந்து வருகின்றன. இதனால், போக்குவரத்து, மின்சாரம் உற்பத்தி மற்றும் தொழிற்துறை செயல்பாடுகள் அனைத்தும் கூடுதல் செலவினை சந்தித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உற்பத்தித் துறையின் செயல்பாட்டு செலவுகள் 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாரிய அளிவில் உயர்ந்துள்ளன. எரிசக்தி செலவுகள் மட்டுமின்றி, மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், தொழில்துறைகள் இரட்டைப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SMEs) அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மத்திய கிழக்கு போர் காரணமாக சுமார் 47 சதவீத நிறுவனங்கள் தங்களது உற்பத்தி செலவுகள் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளன. இந்த செலவு அதிகரிப்பை சமாளிக்க பல நிறுவனங்கள், பொருட்களின் விலையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
அத்துடன், பல நிறுவனங்கள் புதிய முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால் வேலைவாய்ப்பு விரிவாக்கம் குறைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் விளைவாக, பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்வதால், பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து செலவுகள் குடும்பங்களின் மாதாந்திர செலவுகளை அதிகமாக பாதிப்பதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
இதனை கையாளும் வகையில் பிரதமர் கியெர் ஸ்டார்மரின் அரசாங்கம் பல்வேறு தீர்மானங்களை எடுத்துவருவதாகவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

