நுவன் துஷாரவுக்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அனுமதி மறுத்துள்ளதா?

0
34
Article Top Ad

IPL தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடத் தெரிவு செய்யப்பட்டுள்ள நுவன் துஷாரவுக்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அனுமதி மறுத்துள்ளது. இதனை எதிர்த்து அவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (02)வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

நுவன் துஷார போதிய உடற்தகுதியுடன் இல்லை எனக் கூறி அவருக்கு அனுமதி வழங்க இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.

ஆனால், தனது உடற்தகுதி முன்னைய காலங்களில் இருந்ததைப் போலவே தற்போதும் இருப்பதாகவும், கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இதே உடற்தகுதியுடன் விளையாட அனுமதி வழங்கப்பட்டதாகவும் துஷார சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையுடனான தனது ஒப்பந்தம் கடந்த மார்ச் 31, 2026 உடன் நிறைவடைந்துள்ளதாகவும், அதனைத் தான் புதுப்பிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்கத் தீர்மானித்துள்ளதாகவும், தேசிய அணிக்குத் என்னை தெரிவு செய்யப்பட மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், உடற்தகுதியைக் காரணம் காட்டி எனது வாய்ப்பை தடுப்பது நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அனுமதி வழங்கப்படாவிட்டால், ஐபிஎல் நிர்வாகம் தனக்குப் பதிலாக வேறு வீரரைத் தெரிவு செய்யும் என்றும், இதனால் தனக்குப் பாரிய நிதி இழப்பும் ஏற்படும் என்பதுடன், எதிர்கால வாய்ப்புகளும் பறிபோகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நிரந்தரத் தடையுத்தரவு ஒன்றையும் அவர் நீதிமன்றில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது.