பணிந்து போகுமா ஐரோப்பா? அல்லது சிதறுமா நேட்டோ? – டிரம்பின் ‘Petro-Politics’ ஆட்டம்

0
11
Article Top Ad

உலக அரசியல் களத்தில் ஒரு மகா பூகம்பம்! மேற்கத்திய நாடுகளின் இரும்பு அரணாகக் கருதப்படும் நேட்டோ (NATO) கூட்டணியை விட்டு அமெரிக்கா வெளியேறப் போகிறதா?

‘காகிதப் புலி’ என நேட்டோவைச் சாடியுள்ள டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையும், அதனால் உலகப் பாதுகாப்பில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்களும் குறித்த எமது செய்திப்பிரிவின் சிறப்புப் பார்வை:

‘போரின் விளிம்பில் உலகம்’ – இதோ, விசேட கள ஆய்வுத் தொகுப்பு

உலக அரசியல் வரைபடத்தில் ஒரு மாபெரும் பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கிறது! இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புத் தூணாக விளங்கிய நேட்டோ (NATO) கூட்டணியை விட்டு அமெரிக்கா வெளியேறப் போகிறதா? ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதைப் பற்றி இப்போது மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். ஈரானில் அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதல்களுக்கு நேட்டோ நாடுகள் போதிய ஆதரவு வழங்காததே டிரம்பின் கோபத்திற்குத் தீப்பொறி. இந்த மாபெரும் கூட்டணியை அவர் “காகிதப் புலி” (Paper Tiger) என்று பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

1949-ஆம் ஆண்டு 12 நாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்த North Atlantic Treaty Organization, இன்று 32 நாடுகளைக் கொண்ட உலகின் சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் தற்போதைய பொதுச்செயலாளராக Mark Rutte பொறுப்பு வகிக்கிறார்.

நேட்டோ அமைப்பின் உயிர்நாடியே அதன் 5-ஆம் பிரிவு (Article 5) தான். அதாவது, ஒரு உறுப்பினர் நாடு தாக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த நேட்டோ மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு அனைவரும் இணைந்து போரிடுவார்கள் என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் பலம்

இங்குதான் ரஷ்யாவின் நீண்டகாலக் கோபம் தொடங்குகிறது. உக்ரைன் நேட்டோவில் இணைவதை ரஷ்யா ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறது? காரணம் தெளிவானது. நேட்டோ தனது எல்லை வரை விரிவடைவதை ரஷ்யா ஒருபோதும் விரும்பவில்லை. ஒருவேளை உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைகளும், படைத்தளங்களும் ரஷ்யாவின் வீட்டு வாசலுக்கே வந்துவிடும். இது தனது பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் என்பதால் தான், ரஷ்யா உக்ரைன் மீது போரைத் தொடுத்தது.

நேட்டோ கூட்டணியில் அமெரிக்காவே சிம்ம சொப்பனம்! இக்கூட்டணியின் மொத்த இராணுவச் செலவில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்காவே சுமக்கிறது. ஆனால், “ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்புக்காகப் போதுமான நிதி செலவிடுவதில்லை” என்பது டிரம்பின் நீண்டகாலக் குற்றச்சாட்டு. “ஈரான் விவகாரத்தில் நீங்கள் எங்களுக்கு உதவவில்லை என்றால், உங்களைப் பாதுகாக்க நாங்கள் ஏன் பணம் செலவழிக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பும் டிரம்ப், கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதி ராய்ட்டர்ஸ் நேர்காணலில், “வெளியேறுவது பற்றி தான் தீவிரமாக யோசிக்கிறேன்” என அதிரடியாகப் போட்டு உடைத்துள்ளார்.

அமெரிக்கா விலகினால் நேட்டோ ஒரு செயலற்ற அமைப்பாக மாறிவிடும்.

முதலாவதாக, அமெரிக்காவின் “அணு ஆயுதக் குடை” (Nuclear Umbrella) பாதுகாப்பு இல்லாமல் போனால், ரஷ்யாவின் பலத்திற்கு முன்னால் ஐரோப்பா நிலைகுலைந்து போகும்.

இரண்டாவதாக, ஐரோப்பாவிலுள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவத் தளங்கள் மூடப்பட்டால், உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் ஆதிக்கம் சரிவடையும்.

மூன்றாவதாக, நேட்டோ நாடுகள் அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதைக் கைவிட்டு, தங்களுக்குள்ளேயே உற்பத்தியைத் தொடங்கும். இது அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

டிரம்பின் இந்த மிரட்டல் ஐரோப்பிய நாடுகளை மிரட்டிப் பணம் பெறுவதற்கான ஒரு தந்திரமா? அல்லது உலக அரசியலின் புதிய தொடக்கமா? என்பது விவாதத்திற்குரியது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி – ஒருவேளை அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேறினால், அது உலகப் பாதுகாப்பில் ஒரு மீள முடியாத அதிர்ச்சியை உண்டாக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here