இலங்கையில் மீண்டும் வரி உயர்வுக்கான சாத்தியக் கூறுகள்

0
6
Article Top Ad

இலங்கை தற்போது எதிர்கொண்டுவரும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் பிரதானமானவையாக வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு என்பன காணப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை எதிர்கொண்டுவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், சமகால அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இந்த விவகாரத்தை அரசியல் மற்றும் சமூக ரீதியாக மிகவும் விவாதிக்கப்படும் விடயமாக மாற்றியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் எடுத்த சில தவறான தீர்மானங்களால் 2022 ஆம் ஆண்டில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது. வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலை போன்ற காரணிகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான சிரிவை சந்தித்தது.

இந்த நிலைமையிலிருந்து மீள சர்வதேச உதவியை நாட வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக சர்வதேச நாணய நிதியத்துடன் (International Monetary Fund) விரிவான நிதி வசதி திட்டம் (Extended Fund Facility) ஒப்பந்தமாக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் ஒரு முக்கிய நிபந்தனையாக அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வரி சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன.

இலங்கையில் அரச வருவாய் தேசிய வருமானத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அரச செலவுகள் மற்றும் வெளிநாட்டு கடன்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையை மாற்றுவதற்காக வருமான வரி கட்டமைப்பை மாற்றுதல், வற் வரி விகிதத்தை உயர்த்துதல், வரி வசூல் முறைமையை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துதல், வரி விலக்குகளை குறைத்தல் போன்ற விடயங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலம்முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் மூலம் அரச வருவாயை அதிகரித்து நாட்டின் நிதி நிலையை சீரமைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. ஆனால், வரி உயர்வுடன் சேர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக எரிபொருள் விலை, மின்சார கட்டணம், போக்குவரத்து செலவு, உணவுப் பொருட்களின் விலை என்பன வரி உயர்வால் மக்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன். அதேபோன்று மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலும் இந்த நிலைமையை மோசமாக்கியுள்ளது.

இதனால் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் இந்த மாற்றங்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், வருமானம் குறைவால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாது பல குடுங்கள் தங்களது வாழ்க்கைச் செலவுகளை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் தொடர்ச்சியான வாழ்க்கைச் செலவு உயர்வானது பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வாழ்க்கையும் இந்த வாழ்க்கைச் செலவு கடுமையாக பாதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தொடர்ச்சியான விலை உயர்வால் குடும்பங்களின் சேமிப்பு குறைந்துள்ளது. இது சமூகத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயச் சூழல்கள் உருவாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வேலைவாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. செலவுகளின் அதிகரிப்பால் சில நிறுவனங்கள் செலவு கட்டுப்பாட்டிற்காக பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளைகளை தொடர்ச்சியாக மேற்கொள்கின்றன.

இந்த சீர்திருத்தங்கள் குறுகிய காலத்தில் சிரமங்களை ஏற்படுத்தினாலும், நீண்ட காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த உதவும் என சமகால அரசாங்கம் கூறுகிறது. ஆனால், 2022ஆம் ஆண்டுமுதல் இந்த நிலையில் இதுவரை பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் இருந்து ஓரளவேனும் முன்னோக்கிச் செல்ல சர்வதேச முதலீடுகளை அதிகரித்தல், ஏற்றுமதி வளர்ச்சி, சுற்றுலா வருவாயை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

ஆனால், புவிசார் அரசியல் போக்குகள் மற்றும் வல்லரசு நாடுகளின் பொருளாதார தீர்மானங்கள், போர் சூழல்கள் என்பன இலங்கையின் பொருளாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கி வருfகின்றன. வரி உயர்வுடன் மக்களுக்கு சாதமான பொருளாதார சூழலை உருவாக்கும் அரசாங்கத்தில் நகர்வுகள் 2022ஆம் ஆண்டு பின்னர் இதுவரை கைகொடுக்கவில்லை என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்து இருக்குமாயின் வாழ்க்கை செலவு உயர் என்பதும் தொடர்ச்சியாக இருக்கும் என்பதுடன், சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் பிரகாரம் சர்வதேச கடனை மிள செலுத்தும் போது மீண்டும் பல்வேறு வரி உயர்வுகளை நோக்கி இலங்கை நகர வேண்டி துர்ப்பாக்கி நிலை உள்ளதாக எதிர்வுக்கூறல்கள் வெளியாகி வருகின்றன.

எனவே, பொருளாதார சீர்திருத்தங்களுடன் இணைந்து சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டால் மட்டுமே நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையும் சமூக நலனும் ஒரே நேரத்தில் முன்னேறும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here