உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் – ‘அபு ஹிந்த்’ என்பவர் யார்?

0
1
Article Top Ad

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிமித்தம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற, நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் உள்ளனவா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்த கர்தினால் ஆண்டகை, அவ்வாறு இல்லையெனில் உண்மையைத் தேடும் பயணத்திற்கு ஏன் இவ்வளவு தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கூட ஆழமாக ஆராய முடியாமல் போனது. ‘அபு ஹிந்த்’ என்பவர் யார் என்பதைக் கண்டறிவது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் அந்த நபர் பற்றிய தகவல்களைத் தேடுவது மிகவும் அவசியமானது என்றும், அபு ஹிந்தின் அடையாளம் குறித்து சி.ஐ.டி விசாரணை நடத்துவதாக ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளதாகவும் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தனவின் அலைபேசி மற்றும் கணினியில் இருந்த அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நிலாந்த ஜயவர்தன வேண்டுமென்றே தாக்குதல் குறித்த உண்மைத் தகவல்களை மறைத்தாரா? அப்படியென்றால் அவர் ஏன் அவ்வாறு செய்தார்? என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் கடந்த 4 தசாப்த காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுப்பது அரசியல் தலையீடுகள் மற்றும் பொய்களின் செயற்பாட்டினால் கடினமாகியுள்ளதாகவும் அவர் குறுப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அத்தகையதொரு சோகமான அனுபவமாகும். 2024 ஒக்டோபர் 6ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை காலவோட்டத்தில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை என உறுதியளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை யதார்த்தமாக்கி, முழுமையான, வெளிப்படையான, உண்மையின் அடிப்படையிலான விசாரணையை நடத்தி அதன் உண்மையை எமக்கு வெளிப்படுத்துமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.” என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here