அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் ஆரம்ப நிலை ஒப்பந்தத்திற்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க செய்தி நிறுவனம் Axios வெளியிட்ட தகவலின்படி, இந்த முடிவு அமெரிக்க நிர்வாகத்தின் உயர்மட்ட ஆலோசனைகளில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இறுதி அனுமதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வழங்க வேண்டும் என்பதால், தற்போது அதற்காக காத்திருப்பு நிலை தொடர்கிறது.
அமெரிக்க தரப்பில் இருந்து கிடைத்த தகவலின்படி, போர் நிறுத்தத்தை நீட்டித்து ஈரானுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்றபுறம், ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தை வட்டாரங்கள் தெரிவித்ததாவது, இந்த நீட்டிப்பு தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், முடிவு உறுதியானதும் பாகிஸ்தான் உள்ளிட்ட நடுநிலை நாடுகளுக்கு தகவல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஈரான் செய்தி நிறுவனம் TASNIM உறுதி செய்துள்ளது.
இந்த மோதல் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்ட ஆரம்ப போர் நிறுத்தத்துக்கு பிந்தைய தொடர்ச்சியாகும். அதற்கு முன்பு ஏற்பட்ட தாக்குதல்களில், ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் தரப்புகள் மாறி மாறி தாக்குதல்கள் நடத்தியதால் மேற்காசியாவில் கடும் பதற்றம் நிலவியது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளும் பாதிக்கப்பட்டன.
தற்போது போர் நிறுத்தத்தை நீட்டிக்கப்படும் வாய்ப்பு உருவானதால், பிராந்தியத்தில் பதற்றம் குறையக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அணுசக்தி விவகாரத்தில் புதிய பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. யுரேனியம் செறிவூட்டலை ஈரான் கட்டுப்படுத்தினால், பொருளாதார தடைகள் தளர்த்தப்படலாம், வெளிநாட்டு நிதிகள் விடுவிக்கப்படலாம், மேலும் பல பில்லியன் டாலர் முதலீடுகள் வழங்கப்படலாம் என அமெரிக்க தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், சமீப நாட்களில் சில மோதல்கள் தொடர்ந்துள்ளதாகவும், தங்கள் நடவடிக்கைகள் தற்காப்பு நோக்கிலானவை என இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
இந்நிலையில், போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

