
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல், ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்கு நீங்கள் ஆபத்தை விளைவிக்கிறீர்கள் என டிரம்ப், நெதன்யாகுவை கடுமையாக இதன்போது சாடியுள்ளார். பதற்றம் அதிகரித்தால் இஸ்ரேல் மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
நீங்கள் ஒரு பைத்தியகாரர் என்றும் அமெரிக்கா இல்லையென்றால் நீங்கள் சிறையில் இருந்திருப்பீர்கள் என்றும் டிரம்ப் நெதன்யாகுவை சாடியுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக நெதன்யாகு டிரம்பிடம் தெரிவித்துள்ள போதிலும், லெபனானில் பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து டிரம்ப் கவலை வெளியிட்டுள்ளார்.
நெதன்யாகுவுடனான உரையாடலுக்கு பின்னர் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பதற்றம் தணியும் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைத் தாக்கும் திட்டங்களில் இருந்து இஸ்ரேல் பின்வாங்கியயுள்ளது.
என்றாலும், ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் பெய்ரூட்டில் உள்ள அந்த இயக்கத்தின் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
அத்துடன், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை திட்டமிட்டபடி தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

