அரியணை ஏற்றிய எங்களை மறவாதீர்! – கோட்டாவிடம் விமல் இடித்துரைப்பு

0
191
Article Top Ad

“கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிக் கதிரையில் அமர வைத்ததில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் பங்காளிக் கட்சிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால், அதை மறந்து ஜனாதிபதி  செயற்படுகின்றார் போல் தென்படுகின்றது.”

– இவ்வாறு அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

“சமகால பிரச்சினைகள் தொடர்பில் நேரில் கலந்துரையாட ஜனாதிபதியிடம் அரச பங்காளிக் கட்சியினராகிய நாம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், அதற்கு ஜனாதிபதி இணங்கவில்லை. இந்த மனவேதனையில்தான் ஜனாதிபதி தலைமையில் நடந்த ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நாம் கலந்துகொள்ளவில்லை” என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கடந்த 24ஆம் திகதி இரவு நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உரப்பிரச்சினை உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட 52 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இது தொடர்பில் அமைச்சர் விமலிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள சிலர், ஜனாதிபதி தவறான முடிவுகளை எடுக்க வழிசமைக்கின்றனர். ஜனாதிபதி நாட்டின் தலைவர். எனவே, அவர் நாட்டு மக்களின் நலன் கருதியே முடிவுகளை எடுக்க வேண்டும். அதைவிடுத்து கட்சி நலன் சார்ந்து முடிவுகளை எடுக்கக்கூடாது. அது இறுதியில் ஆட்சிக்குத்தான் பாதகமாக அமையும்.

விவசாயிகள் இன்று வீதியில் இறங்கிப் போராட யார் காரணம் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.

நாட்டு மக்களின் எதிர்ப்புக்களில் இருந்து அரசைப் பாதுகாக்கவே பங்காளிகளாகிய நாம் விரும்புகின்றோம். அரசை வீழ்த்துவது எமது நோக்கமல்ல. இதை ஜனாதிபதி உணர்ந்து செயற்பட வேண்டும்” – என்றார்.