இலங்கையில் மீண்டுமொரு கொரோனா அலை ஏற்பட்டு நாடு முடக்கப்படுமாக இருந்தால் அதற்கான பொறுப்பை எதிர்க்கட்சியே ஏற்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்க்கட்சியினர் நாட்டில் மிகவும் தோல்வியடைந்த ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். வெளிநாடுகளில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து வைரஸில் இருந்து அந்த நாடுகளை மீட்க முயற்சிக்கின்றனர். இவ்வாறாக இங்கு எதிர்க்கட்சியினர் அரசுடன் இணைந்து வைரஸை ஒழிக்க ஒத்துழைப்பதற்குப் பதிலாக வைரஸுன் இணைந்து அரசைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர்.
தொற்று நிலைமையில் சுகாதார அதிகாரிகளின் உத்தரவுக்கமைய பொலிஸார் செயற்படுகின்றனர். இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை எதிர்காலத்திலும் நடத்தி இன்னுமொரு அலை ஏற்பட்டு நாடு முடக்கப்படுமாக இருந்தால் அதற்கான பொறுப்பை எதிர்க்கட்சி ஏற்க வேண்டும்.
நான் உத்தரவிடும் பொலிஸாரின் கௌவரத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது. பொலிஸார் மிகவும் கடுமையான பணியைச் செய்கின்றனர். இப்போது வரையில் 15 ஆயிரத்து 700 பொலிஸார் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் 44 பேர் மரணித்துள்ளனர்.
இவ்வாறான பொலிஸாரை அகௌரவப்படுத்துவது தவறாகும். இதனால் இவ்வாறான பேரணிகளை நிறுத்தி தொற்றைக் கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கின்றேன்” – என்றார்.