ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே அரசு விரட்டியடிக்கப்படும்! – சம்பந்தன் திட்டவட்டம் 

0
292
Article Top Ad
ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் அரசுக்கு எதிராக நேற்று (16) நடைபெற்ற மாபெரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடெங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபமடைந்து வருகின்றன. வீதிகளில் மக்கள் அலை மோதுகின்றது. இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு.

அடக்குமுறைகளால் மக்களை ஆள முற்பட்டமையாலேயே அரசு இன்று தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் சிங்கள மக்கள் மட்டுமல்ல பௌத்த தேரர்களும் கைகோர்த்துள்ளனர்.

இன்று ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது” – என்றார்.