கடும்பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள பொருளாதார பேராசிரியர் கூறும் அறிவுரை

0
216
Article Top Ad

இலங்கையில் பொருட்களின் விலைகள் குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடும் அதிகரிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில் சாதாரண மக்கள் அடுத்துவரும் காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் ஆலோசனை வழங்கியுள்ளார். குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலின் போது எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

 

உலகளவில் ஏற்பட்டிருக்கின்ற ஸ்திரமற்ற நிலையைப் பார்க்கின்ற போது ஏற்கனவே இருக்கின்ற பொருளாதார தோல்வியடைந்து விட்டதா? இதற்கு சோவியத் ரஸ்யா மற்றும் அந்தக் காலத்தைப் போன்ற கட்டத்துக்குப் போகவேண்டிய இல்லது ஏதாவது ஒரு மாற்று பொருளாதார ஏற்பாட்டுக்குப் போக வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்துக்கு நாங்கள் தள்ளப்படுவோமா?

1918 ஆம் ஆண்டும் இவ்வாறானதொரு மந்தம் ஸ்பானியக் காச்சல் உருவாகி உலகத்தில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. லண்டனில் அரைவாசி சனத்தொகையினர் இறந்ததுடன் இந்தியாவில் ஆறுகளில் எல்லாம் சடலங்கள் மிதந்ததாக நான் அறிந்தேன். ஆனால் தற்போது தொழிநுட்பத்தின் காரணமாக ஓரளவு வேகமாக தடுப்பூசி வந்ததனால் நாங்கள் தப்பிவிட்டோம்.
ஆனால் அந்த இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும் உலக ஒழுங்கு மாற்றமடைந்து புதுப்புது பொருளாதாரக் கோட்பாடுகள் வந்தது உண்மை தான். ஒரு பெருந்தொற்று வரும்போதும் ஒரு உலக யுத்தம் வரும்போதும் அதன் பின்னர் ஒரு மாற்றம் ஏற்படுவது வழமை. ஆனால் இந்தப் பெருந்தொற்று 2 வருடங்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. வெற்றிகரமாக தடுப்பூசியைச் செலுத்திய நாடுகள் கூட மீண்டும் ஒரு புதிய அலையை எதிர்கொள்கின்றார்கள். மூன்றாவது தடுப்பூசியை ஏற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இந்தத் தொற்று அண்மைக் காலத்தில் முடியக்கூடிய வாய்ப்பு இல்லைப் போல் தெரிகின்றது.
எனவே இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கம் போன்று உள்ள குடும்பம் இருந்தால் அவர்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்வார்கள். அதாவது கூடுதலான கடன், செலவு, அதிகம் வருமானம் இல்லை. இது தான் இலங்கை அரசாங்கம். இலங்கை அரசாங்கம் எவ்வாறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றதோ அதே மாதிரித் தான் அந்தக் குடும்பங்களும் பிரச்சனையை எதிர்கொள்ளும்.
இவ்வாறு இருக்கும் போது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாது. பிள்ளைகளின் நலனைக் கவனிக்க முடியாது. பிள்ளைகள் மீது பாரிய பாதிப்பு ஏற்படும். போசாக்கின்மை ஏற்படும். அதே போன்று தான் இலங்கைப் பொருளாதாரமும் இருக்கின்றது.

அதாவது இலங்கைப் பொருளாதாரம் செல்லும் திசையில் பல குடும்பங்கள் இருக்கின்றன. இந்தக் குடும்பங்கள் அந்த நிலையிலிருந்து படிப்படியாக வெளியேற வேண்டுமாயின் கடுமையாக உழைக்க வேண்டும். கிடைக்கும் வேலையைச் செய்ய வேண்டும். ஆடம்பரமான செலவுகளைச் செய்யக் கூடாது. எவ்வளவு செலவுகளை குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைக்க வேண்டும். தான்தோன்றித்தனமாக நாங்கள் செலவுகளைச் செய்தால் அத்தியாவசியமான செலவுகளை செய்ய முடியாமல் போய்விடும்.

இம்முறை வரவசெலவுத் திட்டம் வந்த பின்னர் நான் பெரிதாக எதிர்பார்க்கவில்லை ஏனென்றால் இலங்கையினுடைய பொருளாதார நிலையை இப்பிடி வைத்துக்கொண்டு எந்த நிதியமைச்சராலும் ஒரு சிறந்த வரவு செலவுத் திட்டத்தை மக்களுக்கு நேரடியாக நன்மை தரக்கூடிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாது என்பது வெளிப்படை.

வருமானத்தைத் திரட்ட வேண்டுமாக இருந்தால் மிகப்பெரிய சீர்திருத்தத்தை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு இலங்கையர்களும் எவ்வளவு உழைக்கின்றார்கள் ஒவ்வொரு நிறுவனமும் எவ்வளவு உழைக்கின்றார்கள் என்ற விடயம் அரசாங்கத்திற்கு தெரிய வேண்டும். அது தற்போதைக்கு சாத்தியப்படாத ஒரு விடயம். ஆகவே வரி செலுத்த மாட்டார்கள்.

வரி ஏய்ப்பு இருக்கின்றது. செலவுகளை அரசாங்கம் உடனடியாகக் குறைக்க வேண்டும். அரசாங்கமே உடனடியாக அதனைச் செய்ய வேண்டும். உதாரணமாகச் சொன்னால் அமைச்சரவை அமைச்சர்கள் இருக்கின்றார்கள் இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அமைச்சரவை அமைச்சருக்கு நான் அறிகின்றேன் ஒரு மாதத்திற்கு 80 இலட்சம் ரூபா செலவழிக்கப்படுகின்றது ஒருவருக்கு. இவ்வாறு இருக்கும்போது 20 அமைச்சர்களை வைத்து அரசாங்கம் ஒரு போர்க்கால அடிப்படையில் செயற்பட வேண்டும். அனைத்து இராஜாங்க அமைச்சுக்களையும் ஒழித்து அனைத்து நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு இந்தப் பெருந்தொற்று முடியும் வரை இலங்கை அரசாங்கம் செய்து காட்ட வேண்டும்.

நாங்கள் செலவு குறைப்பு செய்கின்றோம். நாங்கள் எங்களுடைய ஆடம்பரச் செலவைக் குறைக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்திவிட்டு தான் பின்னர் மக்களிடம் வர வேண்டும்.
மக்களைச் செலவைக் குறைக்குமாறு கூறிவிட்டு ஒரு அமைச்சர் 50 இலட்சத்தை தேநீருக்காக செலவழிக்க முடியாது. அப்போது மக்கள் கேள்வி கேட்பார்கள் நீங்கள் தேநீர் அருந்துவதற்காக 50 இலட்சத்தைச் செவழித்தால் எங்களை எப்படி நீங்கள் சாப்பிடாமல் இருக்கச் சொல்ல முடியும் என்று.
ஆகவே இலங்கை அரசாங்கம் அமைச்சர்கள் எல்லோருமே தங்களது செலவுகளைக் குறைக்க வேண்டும். அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த இராஜாங்க அமைச்சு இப்போதைக்குத் தேவையில்லை. அந்த ஆளணிகளைக் குறைத்து அரசாங்கம் சேமிப்புச் செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் மாத்திரமன்றி அனைத்து அரசாங்கங்களும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
ஆளுங்கட்சியில் உள்ள எல்லா உறுப்பினர்களையும் அமைச்சர்களாக்கிப் பார்க்க வேண்டும். ஏனெனில் அரசாங்கம் பலமாக இருக்கும் என்ற சிந்தனையில் இந்த அரசாங்கம் மாத்திரமன்றி அனைத்து அரசாங்கங்களும் இருந்திருக்கின்றன. இந்த நிலை இப்போதைக்குச் சரிவராது. இவ்வாறான நிலை தொடர்ந்தால் அந்தச் சுமை எல்லாம் மக்கள் தான் சுமப்பார்கள். அது மக்களுக்கு அரசாங்கம் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தும்.