“ஒரே நாடு ஒரு சட்டம்” செயலணியில் ஆரம்பத்தில் ஏன் தமிழர்களை நியமிக்கவிலலை ? ஞானசார தேரர் விளக்கம்

0
160
Article Top Ad

“தமிழர்களின் பிரதிநிதிகள் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தில் என்ன செய்கின்றார்கள்?” என்று ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணியின் மக்கள் கருத்தறியும் பணி தற்போது வடக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்படி, அந்தப் பணி நேற்று (21) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.

ஞானசார தேரர் அங்கு ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.

அதன்போது அவர்,

“நாம் ஒன்றுபட எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. அதனால் ஒரே நாடு – ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை.

போதைப்பொருளால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். விளக்கேற்றுவதற்காக அனுமதி கேட்கும் தமிழ் அரசியல்வாதிகள் போதைப்பொருள் தடுப்பு மத்திய நிலையத்தை உருவாக்கத் தயாராக இல்லை. தமிழர்களது பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் என்ன செய்கின்றார்கள்?

கடந்த 19ஆம் திகதி அன்று கார்த்திகை விளக்கீடு நிகழ்வின்போது, பாதுகாப்புத் தரப்பினர் தலையீடு செய்தமை தொடர்பில் அது சம்பந்தமான விளக்கத்தை நாம் பெறுவோம்” – என்றார்.

இதன்போது, ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணியில் தமிழர்களை முதலில் சேர்க்காமல் எதிர்ப்புக்கள் வந்த பின்னர் சேர்த்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் குறிப்பிடுகையில்,

”இந்தச் செயலணியை ஆரம்பித்தபோது நாட்டுப் பிரச்சினை ஒன்றாகவே இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்களை நியமிக்கவேண்டிய தேவையிருக்கவில்லை.

பொதுவாகவே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரே பிரச்சினையே காணப்படுகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களைத் தெரிவு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. முஸ்லிம்களுக்குப் பல சட்டங்கள் இருப்பதால் அந்தச் சட்டத்தை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவர விரும்பினோம்.

இதன்படி தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம, முஸ்லிம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம். கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்குவோம்” – என்றார்.

இதன்போது ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணியின் உறுப்பினர்களான யோகேஸ்வரி பற்குணராஜா, ஜயம்பிள்ளை தயானந்தராஜா உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.