நாட்டில் ஏன் இரு சட்டங்கள்? – அரசிடம் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி

0
143
Article Top Ad

மஹிந்த ராஜபக்ச கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி புதிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறியே நடைபெற்றது எனக் குற்றஞ்சாட்டிய  ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட  எம்.பி. முஜிபுர் ரஹ்மான், நாட்டில் ஏன் இரு சட்டங்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான  வினாவின்போது ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயிடம் கேள்வி எழுப்புகையிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டிய முஜிபுர் ரஹ்மான், மேலும் கூறுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டங்களுக்கு வந்தவர்கள் பொலிஸாரால் திருப்பியனுப்பப்பட்டனர். நாட்டின் தற்போதைய நிலையில் போராட்டங்களை நடத்தி மக்களை ஒன்றுகூடச் செய்வதால் கொரோனா வைரஸ் பரவும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்

ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு இரு நாட்கள் முன்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக்கத்தால் புதிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் வெளியிடப்பட்டிருந்தது. இதில், விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியும். ஆனால், விளையாட்டுப் போட்டிகளை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது

ஆனால், கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் அரங்கில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ச கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் சுமார் 5 ஆயிரம் பார்வையாளர்கள்  கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, காலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கை – மேற்கிந்தியத் தீவுகளுக்கான டெஸ்ட் போட்டியைப்  பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. நாட்டில் ஏன் இரு சட்டங்கள்?

ஒருவேளை இந்தப் போட்டிக்கும் மஹிந்த ராஜபக்ச கிண்ணம் என்று பெயர் வைத்திருந்தால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

எனினும், இந்தக் கேள்வி பொருத்தமற்றது எனக்  கூறி பதில் வழங்க இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மறுத்துவிட்டார்.