“நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய அரசோ அல்லது கொரோனாத் தொற்றோ காரணமில்லை. 1955ஆம் ஆண்டில் இருந்து நாட்டை ஆட்சி செய்துவந்த அனைத்துக் கட்சிகளுமே இந்த பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பு.”
– இவ்வாறு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“நாடு பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. நாட்டில் பணம் இல்லை. டொலர் இல்லை என்பதை நாங்கள் வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றோம். அவ்வாறு இல்லாமல் நாட்டில் அவ்வாறான பிரச்சினை இல்லை; தேவையான அளவு பணம் இருப்பதாக நாங்கள் தெரிவித்து வந்தால் இந்தப் பிரச்சினையில் இருந்து எமக்கு வெளியில் வரமுடியாது. அதனால்தான் கடந்த ஜூன் மாதம் ஆரம்பத்திலேயே நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்தேன்.
1955ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் சமர்ப்பித்த அனைத்து வரவு – செலவுத் திட்டங்களும் பற்றாக்குறை வரவு – செலவுத் திட்டங்களே. எமது வருமானத்தையும் பார்க்க செலவு அதிகம். அதனால் பற்றாக்குறையை நிரப்பிக்கொள்ளக் கடன் பெற்றோம். அவ்வாறு பெற்ற கடன்தான் இப்போது பாரிய பிரச்சினையாகி இருக்கின்றது. அதனால் இந்தப் பிரச்சினைக்கு 1955இல் இருந்து ஆட்சி செய்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.
எமது அனைத்து தேவைகளுக்கும் வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நிலையே உள்ளது. பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடுவதும் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தேசியக் கொடியை அசைத்துக்கொண்டாடுவதாகும். அதனால் வெளிநாட்டு செலாவணி குறைவது என்பது வியப்பானது அல்ல.
கொரோனா காரணமாக இந்த பிரச்சினை ஏற்படவில்லை. 2019இல் எமது பொருளாதார அபிவிருத்தி வேகம் 2 வீதத்துக்கு குறைந்துள்ளது. கடன் வீதம் 87வீதத்தால் அதிகரித்துள்ளது. அதுதான் பொருளாதார வீழ்ச்சிக்கான அடையாளம். இந்தப் பிரச்சினை எப்போதாவது வெடிக்கவே இருந்தது. எனினும், கொரோனா காரணமாக விரைவாக வெடித்திருக்கின்றது.
நாட்டில் இவ்வாறு தேசிய பிரச்சினை இருக்கும்போது நாங்கள் அதற்கு இணைந்து முகம்கொடுக்கவேண்டும். ஆனால், நாங்கள் கட்சி, இன, மத ரீதியாகப் பிரிந்து இருப்பது மாத்திரமல்லாது கொரோனாப் பிரச்சினைக்கு முகம்கொடுத்து நாட்டைப் பாதுகாப்பது அனைத்து கட்சிகள், இனத்தவர்களின் பொறுப்பு. பாதிக்கப்பட்டிருப்பது எம் அனைவரினதும் நாடாகும்.
எமது நாடு அழிந்தால் நாங்கள் அனைவரும் அழிந்து விடுவோம். அதனால் தொற்று நிலைமையில் தங்களது அரசியலைக் கட்டியெழுப்புவதைவிட தொற்று நிலைமையில் இருந்து நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்றே சிந்திக்கவேண்டும்.
கொரோனாவைப் பயன்படுத்தி அனைவரும் இணைந்து அரசைத் தோற்கடிப்பதற்கு பதிலாக அனைவரும் இணைந்து கொரோனாவைத் தோற்கடிப்பதற்கு இணைந்து செயற்படவேண்டும். என்றாலும் எதிர்க்கட்சி கொரோனா நிலையையும் பொருட்படுத்தாது, மீண்டுமொரு கொரோனா அலையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவது கவலைக்குரியது” – என்றார்.