நியூஸிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 73 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை முழுமையாக வென்றது.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 56 ஓட்டங்களையும் இசான் கிசான் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் சன்ட்னர் 3 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்ன், லொக்கி பெர்குசன் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 185 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, 17.2 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி 73 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்டின் கப்டில் 51 ஓட்டங்களையும் டிம் செய்பர்ட் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் தீபக் சஹார், யுஸ்வேந்திர சஹால் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, அக்ஸர் பட்டேலும், தொடரின் நாயகனாக ரோஹித் சர்மாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.