‘ அந்தக்கும்பல் அவரைத் ( பிரியந்தவைத் ) தேடினார்கள். பின்னர் கூரை மேல் மறைந்திருந்த அவரைக் கண்டுபிடித்துவிட்டனர். அவரை இழுத்துவந்து கடுமையாகத் தாக்கினர். காலை 11.28 மணியளவில் அவர் இறந்துவிட்டார். பின்னர் அவரது உடலை வன்முறைக்கும்பல் எரியூட்டியது.
பாகிஸ்தான் ஸியால்கொட்டிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணியாற்றிய நிலையில் மிலேச்சத்தனமாகப் படுகொலைசெய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவைத் தீர்த்துக்கட்டுவதற்கான சதித்திட்டமொன்று ஏற்கனவே இருந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தற்போது தகவல்களை வெளியிட்டுள்ளன.
டிசம்பர் 3ம்திகதியன்று பிரியந்த குமார மதவெறிபிடித்த கும்பலால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு குற்றுயிராக இருந்த நிலையில் எரியூட்டப்பட்டிருந்தார்.
இந்த அதர்மச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக தேடப்பட்டுவந்தவரை நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளதாக பஞ்சாப் மாநில பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர்.
ராவல்பிண்டியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேரூந்தில் தப்பிச்சென்றுகொண்டிருந்த போதே சந்தேகநபரை பொலிஸார் மடக்கிப்பிடித்திருந்தனர்.
பிரதான சந்தேகநனர் பில்லி என அழைக்கப்படும் இம்தியாஸ் என இனங்காணப்பட்டதுடன் இவர் பிரியந்த குமாரவை சித்திரவதைக்குட்படுத்தி அவரது உடலைச் சின்னாபின்னப்படுத்தியதிலும் தொடர்புடையவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 12 மணிநேரத்தில் மாத்திரம் கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒழுக்க விதிமுறைகளை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்திய காரணத்திற்காக பிரியந்த குமார மீது ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் ஏற்கனவே அவர் மீது வெறுப்புக்கொண்டிருந்ததாக அடையாளம் காட்டப்படாத பொலிஸாரை மேற்கோள் காண்பித்து பாகிஸ்தானின் Geo TV ஜியோ ரீடி செய்திவெளியிட்டுள்ளது.
கடந்த மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை தனது வழமையான மேற்பார்வை விஜயத்தின் போது முகாமையாளர் பிரியந்த குமார சுத்திகரிப்பு பணியாளர்கள் சரியான முறையில் பணியாற்றகாரணத்திற்காக கடிந்துகொண்டுள்ளார்.
ஆடைத்தொழிற்சாலை முற்றுமுழுதாக வர்ணப்பூச்சு பூசுவதற்காக அங்குள்ள சுவர்களில் காணப்பட்ட போஸ்டர்களை முகாமையாளர் அப்புறப்படுத்தத் தொடங்கியதாக ஜியோ டீவி மேலும் செய்திவெளியிட்டுள்ளது.
அதிலிருந்து அப்புறப்படுத்திய போஸ்டர்களில் சில மதத்துடன் தொடர்புட்ட வசனத்தை தாங்கியதாக இருந்ததையடுத்து சில பணியாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்தப்பிரச்சனை காலை 10.28ற்கு நிகழ்ந்தது என ஸியால்கொட் படுகொலை தொடர்பாக பஞ்சாப் மாநில அரசாங்கம் பிரதமர் இம்ரான் கானுக்கு அனுப்பிவைத்துள்ள ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜியோ டிவி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனையடுத்து சில வினாடிகளில் ஆடைத்தொழிற்சாலையின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்சனையை சுமூகமாக தீர்த்துவைத்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. தனது தரப்பில் நிகழ்ந்த தவறான புரிந்துணர்விற்காக பிரியந்த குமார மன்னிப்புக்கோரியதாகவும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரியந்த குமார மன்னிப்புக்கோரியதையடுத்து பிரச்சனை தீர்ந்ததாக கருதப்பட்டதுடன் பணியாளர்களும் கலைந்துபோகத்தொடங்கியுள்ளனர். இருப்பினும் சில ஊழியர்கள் முகாமையாளர் மீது தாக்குதல் நடத்துமாறு சக பணியாளர்களைத் கோபாவேசத்துடன் தூண்டியுள்ளனர்.
ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே கும்பல் அணிதிரண்டதுடன் நிறுவனத்தின் கைத்தொழிற்பிரிவில் முகாமையாளரை இலக்குவைத்து தாக்கத் தொடங்கியுள்ளனர். இதன்போதே அவருடன் பணிபுரியம் அவரது சகா மலிக் அட்னன் வன்முறைக்கும்பலுடன் பிரியந்தவிற்காக பரிந்துபேசியுள்ளார்.
பிரியந்தவிற்கு உருது மொழி தெரியாது அவர் தெரியாமல் போஸ்டரைக் கிழித்துவிட்டார் என அவர் கூறி தனது காலைப் பற்றிக்கொண்டிருந்த பிரியந்தவைக் காப்பாற்ற தனது உடலை மலிக் அட்னன் கவசனமாக்கியபோதும் அங்கு நூற்றுக்கணக்கில் திரண்டிருந்த கும்பலை சமாதானப்படுத்தமுடியாமல் போய்விட்டது. இறுதியில் படுகொலைசெய்துள்ளனர்.
பிரியந்த குமார ஒரு போஸ்டரை அன்றேல் ஸ்டிக்கரை கிழித்துவிட்டதாக பரவிய தகவலையடுத்து அங்கு 800 பேர் அளவில் கொண்ட கும்பலொன்று திரண்டதாக கூறுப்படுகின்றது.
‘ அந்தக்கும்பல் அவரைத் ( பிரியந்தவைத் ) தேடினார்கள். பின்னர் கூரை மேல் மறைந்திருந்த அவரைக் கண்டுபிடித்துவிட்டனர். அவரை இழுத்துவந்து கடுமையாகத் தாக்கினர். காலை 11.28 மணியளவில் அவர் இறந்துவிட்டார். பின்னர் அவரது உடலை வன்முறைக்கும்பல் எரியூட்டியது.
மிலேச்சத்தனமான தாக்குதல் நடந்தபோது 13 பாதுகாப்புக் காவலர்கள் அந்த ஆடைத்தொழிற்சாலையில் இருந்துள்ளனர். அதில் எவருமே பிரியந்த குமாரவை காப்பாற்றவோ கும்பலைக் கலைக்கவோ முன்வரவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்குறிப்பு : இந்த செய்தி பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட செய்தி ஊடகங்கள் மற்றும் பஞ்சாப் மாநில பொலிஸாரின் அறிக்கை ஆகியவற்றை அடியொற்றியதாக எழுதப்பட்டுள்ளது.