“விவேகமற்ற கொள்கைத் தீர்மானங்களால் நாட்டின் விவசாயத்தை அழித்ததைப் போன்று நாட்டின் கல்வியையும் ஜனாதிபதி அழிக்கப் போகின்றாரா?”
– இவ்வாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசு காலத்துக்குக் காலம் எடுக்கும் தீர்மானங்களால் நாட்டின் பல துறைகளிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
அரச பல்கலைக்கழகங்கள் தொடர்பில் அரசின் கருத்துக்கள் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமானது கல்வியைத் தனியார் மயமாக்கும் சட்டமாகும்.
உயர்கல்வியை அந்நிய செலாவணி ஈட்டும் முறையாக மாற்றுவது தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவது யார்?
விவேகமற்ற கொள்கைத் தீர்மானங்களால் நாட்டின் விவசாயத்தை அழித்ததைப் போன்று நாட்டின் கல்வியையும் ஜனாதிபதி அழிக்கப் போகின்றாரா என்ற நியாயமான சந்தேகம் நிலவுகின்றது.
மூன்று அமைச்சர்கள் இருந்த போதிலும் கல்வி முறைமை பிரச்சினைகளால் நிரம்பி வழிகின்றன” – என்றார்.
இதேவேளை, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் கல்வியைப் புறக்கணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளரான மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.