இலங்கை அமைச்சரவை ஒரு முக்கிய முடிவை எடுக்கவுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, திடீரென வெளிநாட்டு பயணமொன்றில் ஈடுபட்டுள்ளார்.
தனிப்பட்ட பயணமாக இன்று அதிகாலை ஜனாதிபதி சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கை அமெரிக்க டாலர் பற்றாக்குறை காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்த தருணத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பிலான முக்கிய அமைச்சரவை கூட்டம் இன்று (13) இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கோட்டபாய ராஜபக்ஷ ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிடவில்லை.
இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பதானது கடந்த நவம்பர் மாதம் வரை 1587 மில்லியன் அமெரிக்க டாலர் என ராஜாங்க அமைச்சர் ஷெஹென் சேமசிங்க நாடாளுமன்ற உரையின் போது தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.
வாகன இறக்குமதி உள்ளிட்ட பல பொருட்களுக்கான இறக்குமதிகள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் செலவீனத்தை குறைத்துக்கொள்வதற்காக அடுத்த வருடம் அரச சேவைக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்வதில்லை என்ற அறிவிப்பையும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவது தொடர்பில் இன்று ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவிருந்தது
எனினும் தீர்மானமிக்க முடிவொன்றை எட்டுவதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி நாட்டை விட்டு திடீரென புறப்பட்டு சென்றுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபபக்ஷ, தனக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களை பயன்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நாடாளுமன்ற அமர்வுகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளை அடுத்த மாதம் 11ம் திகதி கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி நாடாளுமன்ற அமர்வுகளை ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார்.
எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாடாளுமன்றம் மீண்டும் ஆரம்பமாகும்.
நாடாளுமன்றத்தின் அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஒய்வு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் அதே பதவியில் இருப்பார்.
நாடாளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நாடாளுமன்ற செயற்குழுக்களின் நடவடிக்கைகளும் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அந்த செயற்குழுக்களுக்கான நியமனங்கள் புதிதாக இடம்பெற வேண்டும்.
நாடாளுமன்ற அமர்வுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னணியிலேயே அவர் சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளார்.