உலகெங்கும் கடந்த வாரத்தில் 9.5 மில்லியன் கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவும் இது 71 வீத வாரந்த அதிகரிப்பாக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் திரிபு உலகெங்கும் பரவியுள்ள நிலையில் இது ‘சுனாமி’ அளவு அதிகரிப்பாக இருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் உயிரிழப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
‘பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவு கடந்த வாரத்தில் அதிக எண்ணிக்கையான கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன’ என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
ஆண்டு இறுதி விடுமுறையால் சோதனைகளில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா தொற்று தொடர்பான உலக சுகாதார அமைப்பின் வாராந்த அறிக்கையில், கடந்த வாரத்தில் 9,520,488 தொற்றுச் சம்பவங்கள் உலகெங்கும் பதிவாகி இருப்பதோடு 41,178 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. இது முந்தைய வாரத்தில் பதிவான 44,680 உயிரிழப்புகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகும்.