கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைக் கல்வி நடவடிக்கை இன்று திங்கட்கிழமை முதல் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகள் கடந்த திங்கட்கிழமை (03) முதல் 50 சதவீத மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 10 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 100 சதவீத மாணவர்களுடன் இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து கல்விச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கொழும்பு, கண்டி, குருநாகல், நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள முன்னணி பாடசாலைகளைச் சேர்ந்தோர் குளோப் தமிழ் ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும்போது, மாணவர் வருகை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாக தெரிவித்தனர்.
அனைத்து ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதுடன், பலர் மூன்றாவது ஊசியைப் பெற்றுக்கொள்வதற்கு காத்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இதேவேளை, நாட்டில் தற்போது ஒமிக்ரோன் பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி ஏற்றுதல், முகமூடி அணிதல் மற்றும் சுத்திகரிக்கும் செயற்பாடுகள் போன்றன தொடர்பில் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக சுட்டிக்காட்டினர்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டமை நல்ல விடயம் என்று தெரிவித்த தாயார் ஒருவர், எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள ஆபத்து பற்றி கவலைப்படுவதாக குறிப்பிட்டார். குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் சமூக இடைவெளி இல்லை, குழந்தைகள் ஒன்றாக விளையாடுவார்கள் மற்றும் உணவை பகிர்ந்து கொள்வார்கள், வேண்டாம் என்று கூறப்பட்டாலும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களில் அவர்கள் நிச்சயமாக ஒன்றாக நெரிசலில் இருப்பார்கள், எனவே அனைத்துப் பக்கங்களிலும் பெரும் ஆபத்து உள்ளது என்று தெரிவித்தார்.
சுகாதார அபாயங்கள் இருந்தபோதிலும், இணையம் அல்லது மின்சார வசதி இல்லாத கிராமப்புற பள்ளிகளில் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும்.
இலங்கையில் கொரோனா தொற்று ஆரம்பமான காலத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் தங்கள் கல்வியைக் கைவிட வேண்டியிருந்தது.
இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில், உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் மேலும் ஒத்திவைக்கப்படாமல் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதியும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரையும், சா/தரப் பரீட்சை மே 23 ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரையும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.