யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தின் உரித்து யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உரியதுதானா என்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு சந்தேகம் ஏற்பட்ட விடயம் தொடர்பில் உரிய ஆவணம் தற்போது வெளிவந்துள்ளது.
ஆரியகுளத்தின் உரித்து தொடர்பான ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளரிடம் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
பல அரசியல் தலைவர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து ஆரியகுளத்தின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார்.
ஆரியகுளம் மறுசீரமைக்கப்படும் போது இருந்த பேச்சைவிட இந்த உரித்து தொடர்பான விவகாரம் அதிக பேசுபொருளானதால் அது தொடர்பான உரித்து ஆவணத் தேடலும் மும்முரமாக இடம்பெற்றது.
1930 ஆம் ஆண்டு நில அளவைத் திணைக்களம் வரைந்த படத்தை வைத்துக்கொண்டு 1938 ஆம் ஆண்டு அப்போதைய யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அப்போதைய உள்ளூர் அபிவிருத்தி அதிகார சபைக்கு அதனைப் பாரதீனப்படுத்த வரைபடம் தயாரிக்குமாறு எழுத்தில் உத்தரவிட்டார்.
இவ்வாறு அப்போதைய ஆளுநர் வழங்கிய அனுமதியின் பெயரில் ரி13817 இலக்க நில அளவைத் திணைக்களத்தின் வரைபடம் மூலம் மாநகரசபையும் (அப்போதைய நகர அபிவிருத்தி சபையிடம்) அது கையளிக்கப்பட்ட வரைபடமும் கிடைத்துள்ளது.