உங்கள் பத்திரிகை ஆசிரியர் கொலைசெய்யப்பட்ட செய்தியை நீங்கள் எவ்வாறு எழுதுவீர்கள்?

0
288
Article Top Ad

அந்தக் கணத்தின் கட்புல காட்சிகள் உண்மையில் மிக மங்கலானவை. எனது நினைவிலிருக்கும் ஒரேயொரு மனப் பதிவு வண்ணப் புள்ளிகளுடன் கூடிய ஓர் அறை மட்டும் தான். அதற்கு மாறான விதத்தில் அங்கு பேசப்பட்ட வார்த்தைகள் துல்லியமாக எனது நினைவில் இருக்கின்றன.

அது 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி காலை நேரம். போர் அதன் இறுதி நான்கு மாதங்களை அண்மித்துக் கொண்டிருந்ததுடன், ஆறு நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது. மதவாச்சிக்கு அப்பால் போர் குறித்த செய்திகளை சேகரிப்பதற்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பிரிவுக்குள் நான் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. எனது வீட்டு அலுவலகம் அமைதியாக இருந்ததுடன், நான் இருக்கும் இடத்திலிருந்து 200 கிலோ மீற்றர் தொலைவில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் குறித்த செய்திகளின் விபரங்களை வழமையாகத் தேடித் திரட்டும் காலை நேரமாக அது இருந்தது.

‘ரொய்ட்டர்’ செய்தி நிறுவனத்தின் படப்பிடிப்பாளராக பணியாற்றி வரும் புத்திக வீரசிங்க என்னுடன் தொடர்பு கொண்டு, “லசந்த குறித்து தேடிப் பாருங்கள்” எனச் சொன்னார். அவருடைய தொனி ஒரு வித்தியாச இயல்பைக் கொண்டிருந்ததுடன், இது ஒரு பாரதூரமான விடயம் என்பதனை நான் உடனடியாகத் தெரிந்து கொண்டேன். நான் லசந்தவின் இலக்கத்திற்கு அழைப்புக்களை எடுத்தேன்; ஆனால், அந்தப் பக்கத்திலிருந்து பதில் வரவில்லை. அதனை அடுத்து காரியங்கள் மள மளவென அரங்கேறின.

கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களில் நான் களுபோவில ஆஸ்பத்திரியில் இருந்தேன். அங்கு எவ்வாறு சென்றடைந்தேன் என்பதனை இப்போது என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வாகனத்தைச் செலுத்திக் கொண்டு அங்கு போயிருந்தேன். அந்த இடத்தில் பெருந்தொகையான தெரிந்த முகங்களும், அத​போல பெரும் எண்ணிக்கையிலான தெரியாத முகங்களும் ஒன்று திரண்டிருப்பதனைப் பார்த்தேன். எக்ஸிடன்ட் வார்ட்டுக்கு வெளியில் அனைவரும் நின்று கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்களின் முகங்களில் கடும் பதற்றம் குடிகொண்டிருந்தது. புத்திகவும் அங்கு இருந்தார். லசந்த உயிர் தப்புவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என ஆஸ்பத்திரிக்கு உள்ளேயிருந்த யாரோ ஒருவர் கூறுவது எமக்குக் கேட்டது.

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் நான் இலக்கின்றி அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் சண்டே லீடர் பத்திரிகையிலிருந்து நான் விலகியிருந்தேன். சுமார் ஒரு தசாப்த காலம் அங்கு வேலை செய்த பின்னர், செய்திகளை அறிக்கையிடும் விடயத்தில் எனக்கு முட்டுக்கட்டைகள் போடப்படும் விடயத்தை முதல் தடவையாக நான் உணர்ந்த பொழுது அங்கிருந்து வெளியேறினேன்.  நான் எழுதும் செய்திகளை தணிக்கை செய்வதற்கு நேரடியான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால், போர் தொடர்பாக நான் எழுதிய செய்திகள் குறித்து  ஒவ்வொரு வாரமும் கசப்பான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்வது ஒரு வழமையான சம்பவமாக இருந்தது. அது கடும் மன விரக்தியை ஏற்படுத்தியதுடன், அங்கிருந்து வெளியேறுவதற்கான முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளியது.

நான் நினைவில் வைத்திருக்கும் அடுத்த விடயம் எனது அலுவலக சகாவான கணேஷுடன் இருந்தமையாகும். லசந்தவின் ஆடைகள் நிரப்பப்பட்ட ஒரு பையையும், அவருடைய சப்பாத்துக்களையும் கணேஷ் வைத்துக் கொண்டிருந்தார். அவை குறித்த புகைப்படங்கள் என்னிடம் இருக்கும் காரணத்தினால் அது எனக்கு ஞாபகமிருக்கின்றது. அதன் பின்னர் நானும் லீடர் அலுவலகத்துக்குச் சென்றேன். என்னுடைய மேசை நான் விட்டுச் சென்ற விதத்தில் இன்னமும் அவ்வாறே இருந்தது. எனது மேசைக்குப் பின்னால் சுவரில் நான் ஒட்டி வைத்திருந்த பாதியளவு எரிந்த லீடர் அச்சகத்தைக் காட்டும் சுவரொட்டி இன்னமும் அந்த இடத்தில் இருந்தது. லீடர் அலுவலகத்தின் மீதான கடைசி தாக்குதல்கள் குறித்த நினைவுகள். எனக்கு நன்கு பரிச்சயமான இடத்தில் நான் இருந்தேன்.

என்னுடைய சகாக்கள் பத்திரிகையைத் தொகுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அச்சுக்கு அனுப்ப வேண்டிய காலக்கெடு நெருங்கி வந்த காரணத்தினால் ஒரு சில சகாக்கள் ஆஸ்பத்திரியிலிருந்து அலுவலகத்திற்குத் திரும்பியிருந்தார்கள். மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரம ஒரு கையில் தொலைபேசியை வைத்துக் கொண்டு, மறு கையை நெற்றியில் வைத்து நிலைகுலைந்து போய் லசந்தவின் அலுவலக கதவுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் மற்றொரு புகைப்படமும் என்னிடம் இருக்கின்றது. அந்தப் புகைப்படத்தை நான் எவ்வாறு எடுத்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. லசந்த மறைந்துவிட்டார் என்ற செய்தியை லீடர் அலுவலகத்துக்குத் தெரிவித்த தொலைபேசி அழைப்பு அது.

அலுவலகத்தில் ஒருவரும் இருக்கவில்லை என்ற விதத்தில் திடீரென ஒரு பிரமை ஏற்பட்டது. நான் மட்டும் தனிமையில் இருந்தேன். பழுப்பு மற்றும் வெள்ளை நிற அலுவலக தடுப்பு அறைகள் வழமையிலும் பார்க்க பெரியவை போல தென்பட்டன.  திறந்த இயல்பைக் கொண்ட அலுவலகம் எனக்கு ஒரு சுரங்கத்தைப் போல் தெரிந்தது. லசந்தவின் அலுவலகத்தின் கதவை நான் திறந்தேன். அந்த அறை மௌனத்தில் இருந்தது. மேசையில் காகித அடுக்குகள் நிறைந்திருந்தன. அவர் பழம்பாணியிலான இயல்பைக் கொண்டவர்; தனது பத்திகளை கையாலேயே எழுதுவார். தண்ணீர் குவளையொன்றும் அங்கிருந்தது. சுரனிமல (லசந்த வாராந்தம் எழுதும் பத்தியின் தலைப்பு) தனது வேலைகளைச் செய்வதற்கென அந்தச் சாமான்கள் அனைத்தும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவர் இனி ஒருபோதும் அந்த வேலையைச் செய்ய மாட்டார்.

லீடர் அலுவலகத்தைப் பொருத்தவரையில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்கள் மிகவும் பரபரப்பான நாட்கள். அதன் போட்டி இதழ்கள் அச்சுக்குச் செல்வதற்கு முன்னர் லீடர் பத்திரிகை அச்சுக்கு அனுப்பப்பட்டு வந்ததுடன், இரண்டு செய்திப் பக்கங்கள் மட்டும் புதிய செய்திகளுக்காக சனிக்கிழமை வரையில் வைக்கப்பட்டிருக்கும். எழுத்தாளர்கள் கடைசி நேரச் செய்திகளை எழுத வேண்டிய அழுத்தத்திலும் இருந்தார்கள். இந்த வியாழக்கிழமை அந்த  அலுவலகம் வெறுமையாகவும், அமைதியாகவும் இருந்தது. அந்த இடத்திலிருந்து ஓடிவிட  வேண்டுமென்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

எமது வாழ்வு அனுபவங்கள் எம்மை வடிவமைக்கின்றன. லீடர் அலுவலகத்தில் செலவிட்ட அந்த வருடங்கள், இன்று நான் யாராக இருக்கின்றேனோ அந்த நிலைக்கு என்னை வார்த்தெடுத்த வருடங்களாகும். பல வருடகாலம் நான் ஒரு பக்க ஆசனத்தில் அமர்ந்து காட்சிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்ததுடன், லசந்த எவ்வாறு வேலை செய்கிறார் என்பதனை அவதானிக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தக் குழுவில் நான் ஒருபோதும் ஒரு பாகமாக இருக்கவில்லை. ஆனால், நான் அங்கு வேலை செய்த பொழுது நல்லனவற்றையும், மோசமானவற்றையும் நெருக்கமாக இருந்து பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தலை சிறந்த ஒரு குத்துச்சண்டை வீரரின் உதவியாளர் போன்ற நிலை.

லசந்த குறைபாடுகளுடன் கூடிய ஒரு மேதை. டீன் உயன்கொட டுவிட்டரில் எழுதியதைப் போல “நாங்கள் அவரை (லசந்தவை) விமர்சித்துக் கொண்டும், பூஜித்துக் கொண்டும் இருந்தோம். அதாவது, அத்தகைய ஆளுமைகள் தொடர்ந்தும் எம்முடன் இருப்பார்கள் என்ற பொதுவான நம்பிக்கையில் பெரும்பாலானவர்கள் செய்து வரும் விதத்திலேயே நாங்களும் அதனைச் செய்தோம்.”

லசந்தவின் மரணம் குறித்த அதிர்ச்சியிலிருந்து சகஜ நிலைக்கு திரும்புவதற்கு உண்மையில் எனக்கு ஐந்து வருடங்கள் தேவையாக இருந்தது. அவர் உயிருடன் இருந்த காலத்தில் போலவே, அவரது மரணத்தின் பின்னரும் அவர் விட்டுச் சென்ற பாரம்பரியம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது மற்றும் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பதனை ஓர் ஒதுக்குப் புற ஆசனத்திலிருந்து நேரடியாகப் பார்க்கக் கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இது அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த நேரம் தொடக்கம் இன்று வரையில் இடம்பெற்று வருகின்றது. அவருடைய பெயரும், அவருடைய கொடூரமான கொலையும் அரசியல் அபிலாசைகளையும்,  தனிப்பட்ட அபிலாசைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான காட்சிப் பொருட்களாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வப்போதைய அலையைப் பொருத்து இந்தப் பயனாளிகள் ஒன்றில் மௌனமாக இருந்து வந்துள்ளார்கள்; அல்லது தமது குரல்களை உயர்த்தியுள்ளார்கள்.

உங்கள் பத்திரிகை ஆசிரியர் கொலை செய்யப்பட்டிருக்கும் பொழுது அந்தச் செய்தியை நீங்கள் எப்படி எழுதுவீர்கள்? குற்றச் செயல் இடம்பெற்றதனை உடனடுத்து  நீங்கள் அதனை எவ்வாறு செய்வீர்கள்? குற்றச் செயல் இடம்பெற்று பதின்மூன்று வருடங்களின் பின்னர் நீங்கள் அதனை எவ்வாறு செய்வீர்கள்? உங்கள் ஆசிரியர் சவப் பெட்டியில் அசைவின்றிக் கிடக்கும் பொழுது,  அவரைச் சூழ இருப்பவர்கள் தமது அடுத்த அரசியல் நகர்வை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியை நீங்கள் எவ்வாறு சொற்களில் தீட்டிக் காட்டுவீர்கள்?

எனக்கு அச்சமும், துக்கமும், கோபமும் ஏற்பட்டது. சிறிது நேரம் அந்தச் செய்தியிலிருந்து நான் வெளியில் நின்றேன்; அந்தச் சம்பவம் தொடர்பான எனது சொந்த உணர்வுரீதியான எதிர்வினைகளை தாக்கமான விதத்தில் கையாளக் கூடிய நிலை வரும் வரையில் நான் அவ்வாறு இருந்தேன். அதேபோல நான் நன்கு அறிந்திருந்த அந்த மனிதருக்கு நேர்மையானவனாக நடந்து கொள்வதற்கும்   முயற்சித்தேன். லசந்த அவருடைய பக்கச்சார்பான இதழியல் தொழிலுக்கு மத்தியிலும் கூட, அவரது நிலைப்பாட்டை அல்லது அவர் தெரிவு செய்திருக்கும் முகாமின் நிலைப்பாட்டை அதே விதத்தில் பின்பற்ற வேண்டுமென ஒருபோதும் என்னைத் தூண்டவில்லை; துன்புறுத்தவுமில்லை.

உண்மையாகவும், பாரபட்சமற்ற விதத்திலும் செயற்படுவதற்கு அவர் எனக்கு இடமளித்தார். நான் அப்போது இளைஞனாகவும் விரைவில் உணர்ச்சிவசப்படுபவனாகவும் இருந்து வந்தேன். சுயாதீனமான இதழியல் துறையிலிருந்து சற்று விலகி, பக்கச் சார்பான செய்திகளை வெளியிடும் இதழியல் துறையை என்னைச் சூழவிருக்கும் மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் பின்பற்றி வருவதை நான் பார்த்தேன்.

லசந்த ஒருபோதும் பரிவுணர்ச்சியுடன் செயற்படும் ஒரு செய்தி எழுத்தாளராகச் செயற்படவில்லை. அவர் பெருமளவுக்கு கூருணர்வற்ற அரசியல் பத்தி எழுத்தாளராகவே இருந்து வந்தார். அவருக்கு மிகச் சிறந்த ஒரு வலையமைப்பு இருந்ததுடன், தலைச்சிறந்த சட்டத்தரணி ஒருவரின் விவாதத் திறனையும் அவர் கைவரப் பெற்றிருந்தார். ஆனால், நான் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஆள்.

லசந்த இதனை எனக்குக் கற்றுத் தரவில்லை. ஆனால், மற்றவர்கள் குறித்த செய்திகளை உண்மையின் அடிப்படையில் உணர்வுகளுடனும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளுடனும் கூறுவதற்கான சுதந்திரத்தை அவர் எனக்கு வழங்கினார். லசந்த என்ற செய்தி எழுத்தாளரின் புத்திரனாக நான் உள்ளேன். அவருக்கு எப்பொழுதும் நன்றியுடையவனாக இருக்கின்றேன். அவரது அனைத்து குறைபாடுகளுடனும் அவரை இன்றைய இதழியல் துறையில் வைத்துப் பார்க்கும் பொழுது அவர் விட்டுச் சென்றிருக்கும் பாரிய இடைவெளி தெளிவாகத் தெரிகின்றது. இன்றைய மோசமான ஊடகக் கலாசாரத்தில் பரிபூரணமானதொரு மனிதராக அவர் தென்பட்டிருப்பார். அமைதியில் அவர் உறங்கட்டும். சுரனிமல, ஒருநாள் உண்மை வெளியில் தெரிய வரும்.

அமந்த பெரேரா

எழுத்தாளர் இதழியல் துறை ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

How do you report your own editor’s murder? என்ற தலைப்பில் ‘டெய்லி மிரர்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.நன்றி மாற்றம்