பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளன.
சீனாவின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக, பல நாடுகள் ராஜ்ஜ ரீதியிலான புறக்கணிப்புக்களை அறிவித்துள்ளன. அதாவது அவர்களின் உயர் அதிகாரிகள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
எப்போது தொடங்கப்பட உள்ளது மற்றும் எவ்வளவு பெரிய நிகழ்வு இது?
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பெப்ரவரி 4 முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள் 109 வெவ்வேறு விளையாட்டுகளில் போட்டியிட உள்ளனர்.
குளிர்கால பாரா ஒலிம்பிக் மார்ச் 4 முதல் மார்ச் 13 வரை 78 விளையாட்டுகளில் 736 போட்டியாளர்கள் பதக்கத்துக்காக மல்லுக்கட்ட உள்ளனர்.
கர்லிங் போன்ற சில ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மட்டும், பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்ப விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு தொடங்கிவிடும்.
போட்டிகள், சீனத் தலைநகரான பீஜிங்கிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெற உள்ளன. இந்த சர்வதேச நிகழ்வுக்காக சீனாவின் அரசாங்கமும், வணிக நிறுவனங்களும் $3.9 பில்லியன் டொலரை செலவிடுகின்றன.
உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் பீஜிங்கில் உள்ள அரங்கங்களில் நடைபெற உள்ளன.
பீஜிங்கிலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள யான்கிங் (Yanqing) நகரத்தில், ஆல்பைன் பனிச்சறுக்கு, பாப்ஸ்லெட் (Bobsled ) மற்றும் லுக் (Luge) போன்ற விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
பீஜிங்கிலிருந்து 180 கிமீ தொலைவில் உள்ள ஜாங்ஜியாகோவ் (Zhangjiakou), நகரத்தில் பெரும்பாலான பனிச்சறுக்கு மற்றும் ஸ்னோபோர்ட் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
போட்டி நடைபெற உள்ள இடத்தில் போதிய அளவுக்கு பனிப்பொழிவு இல்லை என்பதால், ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் சுமார் 12 இலட்சம் கன மீற்றருக்கு செயற்கைப் பனியைப் பொழிய உள்ளனர்.
இப்படி செயற்கையாக பனிப்பொழிவை ஏற்படுத்துவது சுற்றுச்சூழலை பாதிக்கும் என்கிற கருத்தை, சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, போட்டியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு வலயங்களுக்குள் வைக்கப்படுவார்கள், மேலும் பார்வையாளர்களுக்கான நுழைவுச்சீட்டுகள் பொதுமக்களுக்கு விற்கப்படவில்லை.
எந்தெந்த நாடுகள் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்கின்றன?
அவுஸ்திரேலியா, லிதுவேனியா, கொசோவா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகியவை விளையாட்டுப் போட்டிகளை ராஜ்ஜ ரீதியில் புறக்கணித்துள்ளன.
அவை தங்களின் விளையாட்டு வீரர்களை போட்டிக்கு அனுப்பினாலும், அமைச்சர்களோ, அதிகாரிகளோ கலந்து கொள்ள மாட்டார்கள். அது தான் ராஜ்ய ரீதியிலான புறக்கணிப்பாகக் கருதப்படுகிறது.
சீனாவிலுள்ள ஷின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லீம் மக்களுக்கு எதிராக சீனாவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளை முன்னிட்டு ராஜ்ய ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா கூறியது.
“சீனாவின் சர்வாதிகார ஆட்சிக்கு நாங்கள் எந்த வித சட்டபூர்வமான தன்மையையும் கொடுக்க முடியாது,” என பிரிட்டன் நாடளுமன்ற உறுப்பினர் டன்கன் ஸ்மித் கூறினார்.
சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு, தன் நாட்டு அமைச்சர்களை அனுப்பப் போவதில்லை என ஜப்பான் கூறியுள்ளது. இது, இரு அண்டை நாடுகளுக்கு இடையே இன்னும் பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொதுவான ராஜ்ய நிலைப்பாட்டை எடுக்க முயற்சித்து வருகிறது. பிரான்ஸ் நாடு புறக்கணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது, அந்நாட்டு அதிபர் எமானுவேல் மக்ரோங் “இது போன்ற பிரச்சனைகளை நாம் அரசியலாக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.
பீஜிங்கில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிராக, மனித உரிமை ஆர்வலர்களால் உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சீனா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
சீனாவின் வடமேற்கு மாகாணமான ஷின்ஜியாங்கில், வீகர் முஸ்லிம்களுக்கு எதிராக சீன அரசு அத்து மீறி அடக்குமுறைச் செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீகர் இஸ்லாமிய மக்கள் “மறு கல்வி முகாம்கள்” என்று அழைக்கப்படும் ஒரு பெரிய அமைப்பில் அடைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழுக்கள் கருதுகின்றனர்.வீகர் இஸ்லாமியர்கள், கட்டாய தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கும், பெண்கள் கட்டாயத்தின் பேரில் கருத்தடை செய்யப்படுவதற்கும் ஆதாரங்கள் உள்ளன. அந்த முகாம்களில் அடைக்கப்பட்ட சிலர், தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
கொங்கொங் தேசிய பாதுகாப்பு சட்டம் உட்பட, புதிய சட்டத்தின் மூலம் கொங்கொங்கில் உள்ள மக்களின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துவதாக கம்யூனிஸ்ட் நாடான சீனா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சீன டென்னிஸ் சாம்பியனான பெங் ஷாய் நடத்தப்பட்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், ஜெர்மனி அரசாங்க அமைச்சர்கள் சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கின்றனர்.
சீனாவின் முன்னாள் துணைப் பிரீமியரும், கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட உறுப்பினருமான ஜாங் கௌலிக்கு (Zhang Gaoli) எதிராக, பெங் ஷாய், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகு, கிட்டத்தட்ட மூன்று வார காலத்துக்கு அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அவர்கள் இருவருக்கு மத்தியில் காதல் உறவு இருந்ததாகவும், எனவே தன்னோடு உடலுறவு கொள்ளுமாறு “கட்டாயப்படுத்தியதாகவும்” கூறினார் டென்னிஸ் வீராங்கனையான பெங் ஷாய்.
சீனாவின் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.