நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக காணாமல்போனோரின் உறவுகள் போராட்டம் யாழ். மத்திய கல்லூரி முன் தள்ளுமுள்ளு

0
132
Article Top Ad

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல்போனோர் விவகாரத்தைக் கையில் எடுக்கக்கூடாது எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை யாழ். மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே காணாமல்போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாகக் கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், உறவுகளைத் திருப்பித் தா, நடமாடும் செயலமர்வில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையில் எடுக்காதே போன்ற பல கோஷங்களை எழுப்பினார்.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் நிகழ்வு மண்டபத்துக்குள் செல்ல முற்படுகையில் பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் அங்கு தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டதுடன் குழப்பமான நிலை ஏற்பட்டது.

காணாமல்போனோரின் உறவுகள் யாழ். மத்திய கல்லூரி முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களைத் தன்னிடம் தருமாறு ஆளுநர் கூறியபோது அதற்கு மறுப்புத் தெரிவித்த போராட்டக்காரர்கள் பலமுறை நாங்கள் விபரங்களைக் கொடுத்துள்ளோம். இதுவரை எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவித்தனர். இதையடுத்து ஆளுநர் அங்கிருந்து விலகிச் சென்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் அங்கு கூடியிருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.