பெங்களூர் விமான நிலைய தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவரது உதவியாளருடனும், பாதுகாவலர்களுடனும் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின்னால் ஒருவர் வந்து தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இதற்கு நெட்டிசன்களும், ரசிகர்களும் யார் அந்த நபர் ஏன் இவ்வாறு நடந்தது என கேள்வி எழுப்பினர்.
இதன் பின்னர் விஜய் சேதுபதியைத் தாக்கிய நபர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், வாழ்த்துகள் தெரிவிக்கச் சென்ற தன்னை நடிகர் விஜய் சேதுபதியும் அவரது மேலாளர் ஜோன்சனும் தாக்கி, அவதூறாக பேசியதாக நடிகர் மகா காந்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை எதிர்த்து நடிகர் விஜய் சேதுபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெங்களூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதாகவும், அங்கு, கட்டபட பஞ்சாயத்து நடத்தப்பட்டதாகவும் மகாகாந்தி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்ட நீதிபதி மார்ச் 3 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.