புலிகளுடன் நேருக்குநேர் போரிட்டதாகக் கூறும் கோட்டாபய எம்மைச் சந்திக்கத் தயங்குவது ஏன்? கேள்வியெழுப்புகின்றார் ஹிருணிகா

0
161
Article Top Ad

 

“தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் போரிட்டதாகக் கூறிக்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எம்மைச் சந்திக்க தயங்குவது ஏன்?”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் ஏற்பாட்டாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியதாவது:-

“அரசுக்கு எதிரான எமது போராட்டத்தின்போது ஜனாதிபதி செயலகம் செல்லாமல், ஜனாதிபதி வசிக்கும் வீடு ஏன் சுற்றிவளைக்கப்பட்டது எனக் கேட்கின்றனர். ஜனாதிபதி செயலகம் சென்றால் நடக்கப் போவது எதுவும் இல்லை. ஜனாதிபதிக்குப் பிரச்சினை தெரியவரப்போவதும் இல்லை. மனுக்கள் கொடுத்தாலும் அவை குப்பைத் தொட்டியில் வீசப்படும்.

எனவே, ஜனாதிபதி வசிக்கும் வீடு முன்னால் சென்றால் குறைந்தபட்சம் எமது குரலாவது கேட்டும் பிரச்சினை தெரியவரும். ஜனாதிபதிக்குப் புரியாவிட்டால்கூட பெண்ணான ஜனாதிபதியின் பாரியாருக்காவது, மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தெரியவரும்.

ஆனால், நாம் அங்கு சென்றவேளை ஜனாதிபதியும், பாரியாரும் அநுராதபுரம் சென்றுள்ளனர். பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார்.

நாம் நாட்டுப் பிரச்சினையைச் சொல்வதற்குச் சென்ற வேளை, ஜனாதிபதி ஜோதிடம் பார்க்க அநுராதபுரம் சென்றுள்ளார்.

அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கவோ அல்லது ஜனாதிபதியுடன் தனிப்பட்ட ரீதியில் முரண்படவோ நாம் செல்லவில்லை. பேச்சு நடத்தவே அங்கு சென்றோம்.

ஜனாதிபதியாக இருந்தவர் இராணுவத்தில் இருந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் போரிட்டவர் எனக் கூறிக்கொள்பவர். அப்படியான ஒருவர் எம்மைச் சந்திக்கத் தயங்குவது ஏன்?

அத்துடன், நாட்டுப் பிரச்சினையை எடுத்துரைக்கச் சென்ற எம்மைக் கைது செய்வதற்கு முற்படுகின்றனர்” – என்றார்.