அரசு – கூட்டமைப்பு சந்திப்பு; நடந்தது என்ன?

0
197
Article Top Ad

 – கைதிகள் விடுதலை, விசேட நிதியம் உட்பட 4 கோரிக்கைகள் ஏற்பு

 – இரு மாதங்களுக்கு பிறகே அரசியல் தீர்வு பற்றி பேச்சு

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கும், வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகளை கையகப்படுத்தாமல் இருப்பதற்கும் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுப்பதற்கும், வடக்கு, கிழக்கின் பொருளாதார மீள் எழுச்சிக்காக விசேட நிதியமொன்றை அமைப்பதற்கும் அரச தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25.03.2022) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, நிபுணர்கள் குழுவினர் அறிக்கை வெளிவந்த பின்னர் அரசியல் தீர்வு பற்றி கலந்துரையாடுவதற்கும், அடுத்த சுற்று பேச்சுக்கு முன்னர் முக்கிய நான்கு விடயங்களை செயற்படுத்துவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சந்திப்பில் எடக்கப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் சுமந்திரன் எம்.பி. தெரிவித்த கருத்துகள் வருமாறு,
“ புதிய அரசமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை, மொழிபெயர்ப்புகளுடன் இன்னும் இரு மாதங்களுக்குள் வெளிவரும் என சந்திப்பில் பங்கேற்றிருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அந்த அறிக்கை வெளிவந்த பிறகு அதிகாரப்பகிர்வு உட்பட அரசியல் தீர்வு சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டது.
எனினும், அடுத்த சுற்று பேச்சுக்கு முன்னதாக உடன் மேற்கொள்ளப்பட வேண்டிய, நான்கு விடயங்கள் சம்பந்தமாகவும் இணக்கப்பாட்டுக்கு வரப்பட்டது.
????1.பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இவர்களின் விடுதலை இடம்பெறும்.

????2. வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகள் கையகப்படுத்தப்படமாட்டா. பிரதேச செயலக எல்லைகள், மாவட்ட எல்லைகள், கரையோர எல்லைகள் ஆகியவை மாற்றப்படமாட்டா.
அதேபோல விசேட சட்டத்தின்கீழ் காணிகள் சுவீகரிக்கப்படுவதும் நிறுத்தப்படும். அதாவது இனப்பரம்பலை மாற்றும் விதத்திலான செயற்பாடுகள் நிறுத்தப்படும்.

????3. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஒரு லட்சம் ரூபா என்பது தற்காலிகமானது, அது முழுமையான இழப்பீடு அல்ல என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பின்னணி மற்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

????4. போரினால் பெரிதும் பாதிக்கபபட்ட வடக்கு, கிழக்கின் பொருளாதார மீள் எழுச்சிக்காக ஒரு விசேட அபிவிருத்தி நியதியத்தை உருவாக்குவதற்கும், அதில் புலம்பெயர் மக்களின் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அரசு எல்லா வித நடவடிக்கைளும் மெற்கொள்ளும்.

நிபுணர்கள் குழுவினர் அறிக்கை வந்த பிறகு அரசியல் தீர்வு பற்றி பேச்சுகள் ஆரம்பமாகும்.
அரச தரப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சர்களான சமல் ராஜபக்ச, ஜி.எல். பீரிஸ், அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டமைப்பின் சார்பில் ரெலோ எம்.பிக்களைத்தவிர ஏனையோர் கலந்துகொண்டிருந்தனர்.

செய்தித் தொகுப்பு : ஆர்.சனத்