இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா; ஒமைக்ரோனை விட வேகமாக பரவும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

0
331
Article Top Ad

சீனாவின் வூகான் நகரில் முதன்முதலாக  கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தக் கொரோனா வைரஸ் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களைக் கதி கலங்க வைத்துவிட்டது.

தொற்று பரவலால், சுகாதார நெருக்கடி மட்டும் அல்லாது பொருளாதார ரீதியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.  பல நாடுகளும் ஊரடங்கு விதித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு, தீவிரமாக  போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

அண்மையில் ஒமைக்ரான் வைரஸ் மின்னல் வேகத்தில் பரவியது. ஆனால், பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருந்தது. தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதால் உலக நாடுகள் கொரோனாவுக்கு முந்தைய கால கட்டத்தை நோக்கி வேகமாக பயணித்து கொண்டிருக்கிறது.

எனினும், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள இந்த கொரோனா எக்ஸ்இ  (XE) – என்று அழைக்கப்படுகிறது.

ஒமைக்ரானை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  ஒமைக்ரான் வைரசின் BA’1 மற்றும் BA.2- திரிபுகளில் இருந்து உருமாற்றம் அடைந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து இத்தகைய    Recombinant பிறழ்வுகள் வெளிப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரானின் துணை மாறுபாடு வகையான BA.2 – பரவும் வேகத்தை விட 10 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், இதை உறுதிப்படுத்த கூடுதல் தரவுகள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 19 ஆம் தேதி XE- வகை கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்டதாக பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 637- பேருக்கு இந்த வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே சமயம் வேறு எந்த நாட்டிலும் இந்த புதிய வகை கரோனா கண்டறியப்படவில்லை.