ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்றுடன லீக் ஆட்டங்கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும் 14 போட்டியில் விளையாடின.
புதுமுகமான குஜராத் டைட்டன்ஸ் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ், மற்றொரு புதுமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தலா 18 புள்ளிகளும் (9 வெற்றி, 5 தோல்வி) பெற்று முறையே 2-வது , 3-வது இடங்களை பிடித்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 16 புள்ளிகளுடன் (8 வெற்றி, 6 தோல்வி) 4-வது இடத்தை பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
டெல்லி கேப்பிட்டல்ஸ் 5-வது இடத்தையும் (7வெற்றி, 7 தோல்வி), பஞ்சாப் கிங்ஸ் 6-வது இடத்தையும் (7 வெற்றி 7 தோல்வி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7-வது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8-வது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி) பிடித்தன.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றி, 10 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று முறையே 9-வது, 10-வது இடங்களில் உள்ளன.
இன்று ஓய்வு நாளாகும். ‘பிளேஆப் சுற்று நாளை (24- ந் தேதி) தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி லக்னோ-பெங்களூரு மோதும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ‘குவாலிபையர் 2’ போட்டியில் மோதும்.
எலிமினேட்டர் 25-ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். ‘குவாலிபையர் 2’ ஆட்டம் 27-ஆம் திகதியும், இறுதிப்போட்டி 29-ஆம் திகதியும் அகமதாபாத்தில் நடக்கிறது.
நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல்அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைவது குஜராத்தா? ராஜஸ்தானா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.