“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக அவராகவே பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டை மோசமான பொருளாதார நெருக்கடி தாக்கியிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதை நிகழ்த்தியவர்கள், அதற்குப் பொறுப்பானவர்கள் அரசில் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் பதவி விலகவில்லை. ஜனாதிபதி உடனடியாக அவராகவே பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்.
இந்த நிலைமைக்கு கோட்டாபய ராஜபக்ச முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஜனாதிபதி கோட்டாபய பொறுப்பேற்ற உடனேயே கொண்டுவந்த வரிச்சலுகைகள்தான் இந்த நிலைமை உருவாவதற்கு முக்கியமான காரணம். அவ்வாறான வரிச்சலுகையை நான் கொண்டு வருவேன் எனத் தேர்தலுக்கு முன்னரே கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.
அப்போது நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர இவ்வாறான வரிச்சலுகை இலங்கையில் அமுல்படுத்தப்பட்டால் இலங்கை லெபனான் போலவும், வெனிசூலா போலவும் மாறும் எனக் கூறியிருந்தார். அதனை நாம் தற்போது அனுபவிக்கின்றோம்.
சுதந்திரமாக நாடாளுமன்றில் இருக்கப் போகின்றோம், எதிர்த் தரப்புக்கு வந்துவிட்டோம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டி விட்டு திரும்பவும் அதே நபர்கள் போய் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அதே ஆசனங்களில் அமர்ந்து இருப்பது என்பது மக்களை முட்டாள்கள் என்று நினைத்துச் செயற்படுகின்றனரோ எனச் சிந்திக்க வேண்டியுள்ளது. கோட்டாய ராஜபக்ச – மஹிந்த ராஜபக்சவுக்குப் பதிலாக கோட்டாய ராஜபக்ச – ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார்கள்.
ராஜபக்ச எங்கும் போகவில்லை. ராஜபக்சவின் ஆட்சியே தற்போது நடக்கின்றது. இந்த நிலைமை மாறாமல் பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீளமுடியாது.
மக்களை ஏமாற்றாமல் பொறுப்பானவர்கள் பதவி விலகி அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். ஓகஸ்ட் மாதமளவில் பாரிய பஞ்சமும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும்.
தற்போதுள்ள அரசைப் புதிய அரசு என நான் கூறப் போவதில்லை. இது புதிய அரசு இல்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு அரசு அமைக்கப்படவேண்டும்.
இன்று வடபகுதியிலே மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குப் பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது. இந்த நிலைமை உடனடியாக மாற்றப்பட வேண்டும். மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாக கிடைப்பதற்கான வழிகள் செய்யப்பட வேண்டும்” – என்றார்.