நீதிமன்ற உத்தரவையும் மதிக்காது முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பௌத்த பிக்குகள் குழுவொன்று புத்தர் சிலையை நிறுவும் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று புத்தர் சிலையை வைக்கும் முயற்சியை முறியடித்துள்ளனர்.
இது தமிழர் பிரதேசம், இங்கு சட்டங்களை மீறி இவ்வாறு நடந்துகொள்ள இடமளிக்க முடியாது என்று அங்கு சென்ற தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
பிரதேச தமிழ் மக்களால் வழிபட்டுவந்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் சூலம் உடைத்து எறியப்பட்டு அதன்பின்னர் அங்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடை விதிக்கப்பட்ட பின்னர் அங்கு தொல்லியல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பௌத்த விகாரையொன்று புராதன காலத்தை ஒத்த வடிவில் அமைக்கப்பட்டு வந்தது.
குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர் செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்யும் முயற்சி நேற்று இடம்பெற்றது