46\1 தீர்மானத்தினால் குற்றவியல் நீதிமன்றிற்கான முதற்படியை அடைந்துள்ளோம்-ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் செவ்வி

•எமது பிரதான கோரிக்கைகள் தீர்மானத்தில் உள்ளீர்ப்பு •'காலஅவகாசம்' வழங்கப்பட்டுள்ளதாக பொய்பிரசாரம் •முதிர்ச்சிபெற்ற தினேஷ{க்கு எண்கணிதம் தெரியவில்லை •பேரவையிலிருந்து பொறுப்புக்கூறல் வெளிவிடப்பட்டுள்ளது •அரசு நிராகரித்தாலும் தீர்மானம் செல்லுபடியானதே •குற்றமிழைத்தவர்கள் மீது பயணத்தடைகள் அமுலாகும்

0
292
Article Top Ad

ஐ.நா.மனிதஉரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குற்றவியல் நீதிமன்றை நோக்கிய பயணத்திற்கான முதற்படியை அடைவதற்குரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

\\கேள்வி:- தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூன்று அரசியல் கூட்டுக்கள் ஒன்றிணைந்து ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நா.தீர்மானத்தினை கூட்டமைப்பு மட்டுமே ‘நாம் கோரிய விடயங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன’ எனக் கூறி வரவேற்றிருக்கின்றது?

\\பதில்:- மூன்று தரப்புக்களும் ஒன்றிணைந்து அனுப்பிய கடிதத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயமானது, ஐ.நா. பொதுச்சபை அல்லது, செயலாளர் நாயகத்தின் மூலம் ஐ.நா.பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் நோக்கத்துக்கான முன்னேற்பாடாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து அவ்விடயம் வெளியே எடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டடிருந்தது.
தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கடந்த மூன்று தீர்மானங்களில் காணப்பட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ‘கலப்பு பொறிமுறை’ என்ற விடயம் முழுமையாக வெளியில் விடப்பட்டுள்ளது. அத்துடன் பொறுப்புக் கூறல் விடயமானது முழுமையாக சர்வதேச பொறிமுறைக்குள்ளே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தீர்மானத்தின் பந்தியொன்றில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையால் பொறுப்புக்கூறல் விடயத்தினை நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த முடியாது. இதனை முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை அம்மையாரும் அண்மையில் நடைபெற்ற மெய்நிகர் மாநாட்டில் குறிப்பிட்டிருக்கின்றார். தற்போதைய தீர்மானத்தில், பொறுப்புக்கூறல் விடயம் தமது தளத்திலிருந்து வெளிவிடப்படுவதையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கி நகர்த்துவதையும் பேரவையால் பயன்படுத்தக்கூடிய சொற்பிரயோகங்களுக்கு அமைவாக கூறப்பட்டுள்ளது.
அனுப்பிய, கடிதத்தில் இரண்டாவது பிரதானமான விடயமாக, சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தோம். அந்தக் கோரிக்கையும் முழுமையாக உள்ளீர்க்கப்பட்டுள்ளது. பூச்சிய வரைவில் சாட்சியங்களை பாதுகாப்பது தொடர்பான விடயம் காணப்படாது விட்டாலும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சாட்சியங்களை சேகரித்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் காணப்படுகின்றன. அதற்கான நிபுணர்கள் குழு நியமிக்கப்படுவதும், நிதி ஒதுக்கீடும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே நாம் கடிதம் மூலமாக கோரிய விடயங்களில் பிரதானமாக காணப்படும் இரண்டு விடயங்களும் தீர்மானத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இம்முறை உறுப்புரிமையைக் கொண்ட நாடுகள் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொள்ளும் போது எதிர்பார்த்ததையும் விட கூடுதல் வலுவுள்ளதாகவே தீர்மானம் காணப்படுகின்றது.

\\கேள்வி:- சுமந்திரன் என்ற தனிநபரே ஐ.நா.மனித உரிமை விவகாரங்களை கையாண்டிருக்கின்றார் என்ற கூறப்படுவதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

\\பதில்:- தனிநபராக கையாண்டேன் என்று கூறமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கு அமைவாக அந்த விடயத்தினை கையாண்டிருந்தேன். இந்தப் பொறுப்பானது கடந்த ஏழெட்டு வருடங்களாக எனக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
அதனடிப்படையில் கொழும்பில் நடைபெறும் சந்திப்புக்கள், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நேரடி, மற்றும் முறைசார அமர்வுகளில் பங்கேற்றிருக்கின்றேன். என்னுடன் சிவில் பிரதிநிதிகள், முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதிகளும் பங்கெடுத்திருக்கின்றார்கள்.

\\கேள்வி:- ஆனால் இவ்வாறான சந்திப்புக்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை என்று உங்களுடைய கட்சி உறுப்பினர்களும், பங்காளிக்கட்சிகளின் உறுப்பினர்களும் கூறுகின்றனர். ஐ.நா. தீர்மானம் தொடர்பில் கூட உங்களுடைய கருத்திற்கும் பங்காளிக்கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கும் இடையில் நேரெதிரான நிலைமைகள் இருக்கின்றன.ஏன் இவ்வாறான நிலைமை நீடிக்கின்றது?

\\பதில்:- பங்காளிக்கட்சிகளின் நிலைப்பாடுகள் சம்பந்தமாக அவர்களிடத்தில் தான் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கு அமைவாகவே நான் செயற்படுகின்றேன். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு நான் அனைத்து விடயங்களையும் தெரியப்படுத்தியே செயற்பட்டு வருகின்றேன்.
மேலும், இராஜதந்திர ரீதியான இந்த விடயங்கள் பகிரங்கமாக முன்னெடுக்கப்படுபவையும் அல்ல. அதேநேரம், பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் என்னால் முன்னெடுக்கப்படும் விடயங்களை இயன்றவில் பகிர்ந்திருக்கின்றேன்.

\\கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது தனது அதிகாரத்தினை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ‘இறைமையினை’ பாதிப்பதாகவும் அதன் காரணத்தால் தீர்மானத்தினை நிறைவேற்றுவதாகவும் இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றதே?

\\பதில்:- இலங்கை அரசாங்கம் இவ்வாறு கூறிக்கொண்டிருப்பதையிட்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்தே வெளியேறுவதாக அறிவித்த அரசாங்கமானது இந்த தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. நாம் அவ்வாறு எதிர்பார்க்கவும் இல்லை. இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லுபடியற்றதாகிவிடாது. அரசாங்கம் இவ்வாறு தான் தொடர்ச்சியாக கூறிக்கொண்டு இருக்கப்போகின்றது. ஆகவே அதுபற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை.

\\கேள்வி:- வெளிவிவகார அமைச்சர் தினேஷ; குணவர்த்தன இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் மேற்குலக நாடுகள் 24 நாடுகளின் ஆதரவைப் பெறவில்லை. தீர்மானத்திற்கு ஆதரவாக 11நாடுகளும், நடுநிலையாக 14நாடுகளும் காணப்பட்டமையானது தமக்கே சாதகமான நிலைமையென்று கூறியிருக்கின்றாரே?

\\பதில்:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கான வரையறைகள் காணப்படுகின்றன. அங்கு பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் தான் அவை சட்ட வலுவான அங்கீகாரம் பெற்றவையாகும் என்று கூறப்படவில்லை. சதாரண பெரும்பான்மையைப் பெற்றாலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவே கொள்ளப்படும்.
இலங்கைப்பாராளுமன்றத்தில் நீண்டகால உறுப்பினராக இருக்கும் தினேஷ;குணவர்த்தன, தற்போது சபை முதல்வராகவும் இருக்கின்றார். அத்தகையதொரு முதிர்ச்சி பெற்ற உறுப்பினர் ‘எண்கணிதம்’ தெரியாவர் போன்று நடந்து கொண்டிருப்பது வேடிக்கையானது.

கேள்வி:- ‘இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முன்னேற்றுதல்’ எனும் தலைபைபிலான தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில் அடுத்தகட்டமாக நடைபெறப்போவது என்ன?

பதில்:- இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானத்திற்கு எதிரான பிரதிபலிப்புக்களை தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில் தீர்மானத்தில் உள்ளவாறு நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டு சாட்சியங்களை திரட்டும் செயற்பாடுகள் உடனடியாக முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்கும் அவுஸ்திரேலியா முன்வந்திருக்கின்றது.
இந்நிலையில் சாட்சியங்களைப் பெறுவதற்காக இலங்கையினுள் வரவேண்டிய தேவைகள் காணப்பட்டால் நிபுணர்கள் அதற்கான அனுமதியைக் கோருவார்கள். அவசியம் ஏற்பட்டால் அரசாங்கத்திடம் ஒத்துழைப்புக்களைக் கோருவார்கள். அவ்வாறு இல்லையேல் அவர்கள் இலங்கைக்கு வெளியால் இருந்தே அனைத்து விடயங்களையும் கையாளுவார்கள்.
அவ்வாறு சேகரிக்கப்படும் சாட்சியங்கள் பாதுகாக்கப்பட்டு இலங்கையின் பொறுப்புக் கூறல் விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பாரப்படுத்தப்படும்போது அதற்கான முக்கிய சான்றப்பொருளாக இது அமையவுள்ளது.
ஆகவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இலங்கையின் பொறுப்புக்கூறலை அடைவதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குச் செல்வதற்கான பயணத்தின் முதற்படியை தற்போது அடைந்திருக்கின்றோம்.

\\கேள்வி:- நிபுணர்கள் குழுவின் சாட்சியங்களைத் திரட்டும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் என்னவாக இருக்கப்போகின்றது?

\\பதில்:- சாட்சியங்களை திரட்டும் செயற்பாட்டில் எமது முழுமையான பங்களிப்பு இருக்கும். ஆனால் தற்போதைய சூழமைவுகளில் அது தொடர்பில் என்னால் பகிரங்கப்படுத்த முடியாது.

\\கேள்வி:- இலங்கையில் உள்ள சாட்சியங்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்விதமான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றீர்கள்?

\\பதில்:- இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்காத வரையில் சாட்சியங்களின் பாதுகாப்பிற்கான பொறிமுறையை உருவாக்க முடியாது. அதேநேரம் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாது விடவும் முடியாது. எனினும் அதற்காக நாம் எடுத்த, எடுக்கவுள்ள நடவடிக்கைகளை இந்தப்பதிலில் வெளிப்படுத்துவதனால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கே மேலும் நெருக்கடிகள் ஏற்படும். ஆகவே அந்த விடயத்தினை நாம் முறையாக முன்னெடுப்போம். தற்போது பகிரங்கப்படுத்த முடியாது.

\\கேள்வி:- நிறைவேற்றப்பட்ட ஐ.நா.தீர்மானத்தினை வலுவானதாக பிம்பப்படுத்துவதன் மூலம் மறைமுகமாக ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் கால அவகாசத்தினை நீங்கள் பெற்றுக்கொடுத்திருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளாரே?

\\பதில்:- முதலாவதாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கை அரசாங்கம் எம்மை தேசத்துரோகிகளாக சித்தரிக்கின்றது. தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக பதற்றமடைந்திருக்கின்றது. அவ்வறான நிலைமைகளை பொதுவெளியிலே அவதானிக்க முடிகின்றது. அதன்மூலம் தீர்மானத்தின் ‘வலுவான தன்மை’ வெளிப்படுகின்றது.
அடுத்து, கால அவகாசம் வழங்குதல் என்ற விடயம் கடந்த காலங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிடப்பட்ட பிரசாரமாகும். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ஒருபோதும் கால அவகாசம் வழங்கப்படுவதில்லை. நாடொன்றின் மீது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் மேற்பார்வைக்கான கால எல்லைக்குரிய ஆணையை உறுப்பு நாடுகளே வழங்குகின்றன.
அந்த வகையில் கடந்த காலங்களை விடவும் தற்போது உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கு ஒருதடவையும் வாய்மொழி மற்றும் எழுத்து மூலமாக் மேற்பார்வை செய்த விடயங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
உயர்ஸ்தானிகரின் மிகவும் இறுக்கமான மேற்பார்வைக்குள் இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆகவே கஜேந்திரகுமாரின் இவ்விதமான அர்த்தமற்ற குற்றச்சாட்டக்களுக்கு தொடர்ச்சியாக பதிலளிக்க முடியாது.

\\கேள்வி:- கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டை விடுத்தாலும், நேரடியாகப் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய விடயத்தினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்குள் குறுக்கி ஒவ்வொரு தடவையும் இரண்டு ஆண்டுகளாக காலம் கடத்தப்படுவதாகவும் இதற்கு நீங்கள் உள்ளிட்ட ஒருசிலர் துணைபோவதாகவும் குற்றம் சாட்டுகின்றார்களே?

\\பதில்:- நான் ஏற்கனவே கூறியதைப் போன்று இந்த தடவை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளிவிடப்பட்டு விட்டது. ஆனால் அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கும் அதிகாரம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிடத்தில் இல்லை. இந்த யார்த்தத்தினை புரியாது, பாதிக்கப்பட்ட மக்களை சிலர் தவறாக வழிநடத்தி அவர்களின் நீதிக்கோரிக்கைக்கான போராட்டங்களை மலினப்படுத்துகின்றார்கள். இதுவொரு துரதிஷ;டவசமான நிலைமையாகும்.

\\கேள்வி:- ஐ.நா.தீர்மானமானது, ஆட்சிமாற்றத்தினை இலக்காக கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றதா?

\\பதில்:- போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இலங்கையில் பொறுபுக்கூறலையும், நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று அப்போதைய ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தினார். அந்த திசையிலிருந்து இலங்கை அரசாங்கம் மாறாக பயணிக்க ஆரம்பித்தமையாலேயே அவர் நிபுணர் குழுவை நியமித்து அறிக்கை தயாரித்தார். பின்னர் மனித உரிமைகள் பேரவைக்கும் இந்த விடயம் சென்றது. தற்போது நடைபெற்ற பேரவையின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை எட்டுதல் தொடர்பிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்று இருக்கவில்லை.

\\கேள்வி:- ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தமரா குணநாயகம் போன்றவர்கள், கேந்திர ஸ்தானித்தில் உள்ள இலங்கையின் மீது தமது ‘பிடியை’ வைத்திருப்பதற்காகவே இவ்வாறான இறுக்கமான தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது என்று கூறுகின்றனரே?

\\பதில்:- இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்த நாடுகளின் உள்நாட்டு நிலைமைகளையும், எதிர்ப்பு தெரிவித்த நாடுகளின் உள்நாட்டு நிலைமைகளையும் பார்கின்றபோது சில விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். அடக்குமுறை, ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்குடைய நாடுகள் தீர்மானத்தினை எதிர்த்துள்ளன. வெளிப்படைத்தன்மை, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தல் போன்ற விடயங்களில் கரிசனைகொண்ட நாடுகள் ஆதரவளித்துள்ளன. இது தான் பூகோள நிலைமையாகும். இலங்கையை அடிபணியச் செய்வதற்கான மேற்குலகத்தின் சதி என்பதெல்லாம் வெறும் கற்பனைக் கதைகளே.

\\கேள்வி:- நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் உள்ளடக்கங்களுக்கு அமைவாக வெளிநாட்டுப்படைகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா?

\\பதில்:- அவ்விதமான நிலைமைகள் உடனடியாக ஏற்படுமென்று கருதவில்லை. எனினும் நாடு மோசமான நிலையிலேயே பயணிக்கின்றது. இதனைவிடவும் மோசமான நிலைமைகள் உருவாகினால் நிலைமைகள் என்னவாகும் என்று தற்போது கூற முடியாது. ஆனால் ஐ.நா.தீர்மானத்திற்கு அமைவாக வெளிநாட்டுப்படைகள் இலங்கையில் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக தமரா குணநாயகம் கருத்து வெளியிட்டதன் பின்னர் எமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

\\கேள்வி:- தீர்மானத்தினை நிறைவேற்றும் வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலைமை வகித்தமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

\\பதில்:- இந்தியா இலங்கையுடன் கொண்டிருக்கும் உறவை தொடர்ந்து பேணுவதற்காகவும், பல விடயங்களை இராஜதந்திர மட்டத்தில் அணுகுவதற்கான இடைவெளியை நடுநிலை வகித்ததன் மூலம் பேணிவருகின்றது.
அதேநேரம், தமிழ் மக்களின் அபிலாiஷகளை அடைவதற்கு உறுதுணையாக இருப்போம் என்று ஜெனிவாவில் இரண்டு தடவைகள் வெளிப்படையாகவும் உறுதியாகவும் கூறியுள்ளார்கள்.
அத்துடன், அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படைக் கட்டமைப்பை ஒழிப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை தடுக்கும் முகமாக மாகாண சபை முறைமையை வலியுறுத்தி நடவடிக்கைளையும் எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
மேலும், பிராந்திய வல்லரசாகவும், அயல்நாடாகவும் இருக்கும் இந்தியா இலங்கைக்கு நேரடியாக அழுத்தங்களைப் பிரயோகித்து அடிபணிய வைப்பதற்கு முயற்சிக்காது வௌ;வேறு தளங்களில் இலங்கையை கையாள்வதற்கு முயற்சிக்கின்றார்கள் என்பதும் தெளிவாகின்றது. அந்த முயற்சிகள் கூட தமிழர்களின் நன்மைக்கானவை தான்.

\\கேள்வி:-அடுத்து வரும் காலத்தில் பொருளாதாரத்தடைகள், நபர்களை இலக்குவைத்த பயணத்தடைகள், சொத்துக்களை முடக்குதல் போன்ற செயற்பாடுகளை சர்வதேச நாடுகள் முன்னெடுக்குமா?

\\பதில்:- முதற்கட்டமாக குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான தனிநபர்களை மையப்படுத்தி பொறிவைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். அது பயணத்தடையாகவோ அல்லது அவர்களின் சொத்துக்களை முடக்குவதாகவோ அமையலாம்.

மார்ச் மாதம் 28ம் திகதி வீரசேகரியில் பிரசுரமான இந்த நேர்காணலை வீரகேசரிப் பத்திரிகையின் உதவி செய்தி ஆசிரியர் ஆர்.ராம் மேற்கொண்டிருந்தார். இதன் முக்கியத்துவம் கருதி மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.

#INTERVIEW with M.A.SUAMANTHIRAN PC _MP_SPOKES PERSON OF TNA @ virakesari weekly 28-03-2021 #Geneva #Resolution #Gov.SL #Tamil Stands