4 பில்லியன் டொலர் உதவிப் பொதி தொடர்பில் சீனாவுடன் “விரைவில்” கலந்துரையாடலை சாதகமாக முடிக்க இலங்கை எதிர்பார்ப்பதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார்.
“இந்த கலந்துரையாடல் விரைவில் முடிவடையும் என்று நாங்கள் நம்புகிறோம். மோசமான நிதி நிலைமைகளில் இருந்து மீள இலங்கைக்கு நிச்சயம் சீன உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பார்வையாளர்கள் முந்தைய ராஜபக்ச அரசாங்கத்தின் தவறான பொருளாதார, தவறான நிர்வாகத்தை குற்றம் சாட்டியுள்ள நிலையில், கோவிட்-19 தொற்றுநோய் உள்ளிட்ட காரணிகளின் எதிர்பாராத ஒருங்கிணைப்புதான் இந்நிலைக்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறினார்.
சீனா இலங்கைக்கு ஒரு முக்கிய கடன் வழங்குனராக இருந்து வருகிறது. இருப்பினும் நாடு எவ்வளவு கடன்பட்டுள்ளது என்பது ஒரு கேள்வியாக உள்ளது. இலங்கை இந்த ஆண்டு கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியில் மூழ்கி, மே மாதம் முதல் முறையாகத் திருப்பிச் செலுத்தாததால், பெய்ஜிங் கடன் மறுசீரமைப்புடன் இணைந்து செல்ல தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
ஆனால், கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்த பின்னர் ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது பிடியை உறுதிப்படுத்தவும் அமைதியின்மையைத் தணிக்கவும் முயற்சிக்கையில் மீண்டும் சீனாவை நோக்குகிறார்.
இந்த வார தொடக்கத்தில் இருந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அரசாங்க எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர்களை பொலிஸார் சுற்றி வளைத்து வருகின்றனர். நாடாளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்ததையடுத்து, அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும்.
புதிய அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான அதிருப்தி மற்றும் எதிர்ப்புக்கள் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிதியை பெறுவதற்கான முயற்சிகளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்தபோது , ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இறுதிக்குள் வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர், கூடிய விரைவில் இலங்கைக்கு உதவிகளை வழங்க விரும்புவதாகவும், எந்தவொரு நிர்வாகத்துடனும் இணைந்து செயற்படுவதாகவும் கூறினார். ஆனால் அரசாங்கத்தின் சமகால போக்கு இந்த நடவடிக்கையில் காலதாமதத்தை ஏற்படுத்தும் அறிகுறி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், சீனாவின் 4 பில்லியன் டாலர் உதவிப் பொதியில் இலங்கை நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதில் $1.5 பில்லியன் கடன் வரி மற்றும் பெய்ஜிங்குடன் $1.5 பில்லியன் நாணய பரிமாற்றத்தை செயல்படுத்துவது ஆகியவை அடங்கும்.
விக்கிரமசிங்க பதவியேற்ற மறுநாள், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்துச் செய்தியை அனுப்பியதோடு, “என்னால் இயன்றவரை ஆதரவையும் உதவிகளையும் வழங்குவதாக” உறுதியளித்தார்.
ஆகவே, இலங்கையின் அந்நிய கையிருப்பை தீர்மானிக்கும் சக்திகளாக அமெரிக்க, சீன நாடுகள் மாறியுள்ளதாகவும் இதன் பின்புலத்தில்தான் அடுத்தடுத்து ராஜதந்திரிகள் ஜனாதிபதி ரணிலை சந்தித்த்து வருவதாக சர்வேதச பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.