பாடசாலை மாணவர்களை வேலைக்கு அனுப்ப அரசு முயற்சி ; தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு!

0
100
Article Top Ad

பாடசாலை செல்லும் வயதுடைய குழந்தைகளுக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய திட்டத்தின் மூலம் நாட்டில் பெரும் சமூக வீழ்ச்சி ஏற்படக்கூடும் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

நேற்று (11) இடம்பெற்ற கூட்டமைப்பினரின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகளுக்கு 20 மணித்தியாலங்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நோக்கத்திற்காக சட்டங்களை திருத்த உத்தேசித்துள்ளது.

நாட்டில் கல்வி வீழ்ச்சியடைந்துள்ள வேளையில், கல்விக்கான திட்டத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது குறித்து அரசாங்கம் சிந்தித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். “அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ, இதன் மூலம் பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகளை எதிர்காலத்தில் விரைவில் வேலைக்காக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.