வெளியே செல்லக் கூடாது ; கோட்டாபயவுக்கு தாய்லாந்து பொலிஸ் நிபந்தனை!

0
115
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தின் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள பாங்கொக்கில் உள்ள விடுதியில் தங்கியுள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் விடுதியை விட்டு வெளியே வரவேண்டாம் என அவரிடம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக கோட்டாபய ராஜபக்ச கடந்த மாதம் 13 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறி, மாலைதீவு சென்ற அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் சிங்கப்பூருக்கு பறந்தார்.

அங்கிருந்தபடியே ஜனாதிபதி பதவியை அவர் இராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

சிங்கப்பூரில் அவருக்கு முதலில் 14 நாட்கள் தங்க அனுமதிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த 11ஆம் திகதி வரை அவருக்கு சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றுடன் அவருக்கு சிங்கப்பூரில் விசா முடிந்தது.

இதனால் அவர் சிங்கப்பூரில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். பின் சிங்கப்பூரில் இருந்து நேற்று இராணுவ விமானம் மூலம் தாய்லாந்துக்கு புறப்பட்டார். அங்கு சென்ற அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காக சாதாரண உடையில் காவல்துறையினர் விடுதியை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பாதுகாப்புக் காரணங்களுக்காக தாய்லாந்தில் தங்கியிருக்கும் வரை விடுதியை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியே வரவேண்டாம் என தாய்லாந்து காவல்துறையினர் கோட்டாபய ராஜபக்சவை கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கையில் இருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச இதுவரை பொதுவெளியில் தலைகாட்டவில்லை. தாய்லாந்தில் தற்போது தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச தனது 90 நாள் விசா காலம் முடிந்ததும் அங்கிருந்து இலங்கைக்கு திரும்பலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.