ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் சந்தேகநபர்கள் விடுதலை!

0
143
Article Top Ad

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களை கம்பஹா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கம்பஹா முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் எனப்படும் மொரிஸ் ஆகியோர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேரை 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வெலிவேரிய கண்டி மைதானத்திற்கு அருகில் குண்டுத் தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக இரு சந்தேக நபர்களும் குற்றம் சாட்டப்பட்டனர்.

அப்போது கம்பஹா பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய லக்ஷ்மன் குரே இந்த குண்டுவெடிப்புகளுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டி 2009 ஆகஸ்ட் 12 அன்று கைது செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், குறித்த கொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் இருவரையும் குற்றமற்றவர்கள் என கம்பஹா இலக்கம் 01 உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார விடுதலை செய்தார்.