ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஹரின் புதிய தகவல்கள்! – மூடி மறைக்க முயல்வதாக அரசின் மீது கடும் சாட்டை

0
310
Article Top Ad

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தியவர்களைக் கைது செய்து சிறையில் போட்டும், விசாரணை நடத்திய அதிகாரிகளை இடமாற்றியும் இந்த அரசு எதனை மூடி மறைக்க முனைகின்றது?”

– இவ்வாறு கேள்வி எழுப்பினார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ.

நாடாளுமன்றில் இன்று அவர் உரையாற்றும்போதே இந்தக் கேள்வியை எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்கள் நால்வர் உட்பட அதிகமான அதிகாரிகள் இடமாற்றப்பட்டது ஏன்?

தாக்குதல் விசாரணைகளின் பின்னணியில் ஒரு புலனாய்வுத்துறை அதிகாரியைக் கைதுசெய்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும்போது, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இது எங்களின் விடயம் என்று கூறி அவரை அழைத்துச் சென்றனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் நான் வெளியிடும் தகவல்கள், ஆணைக்குழு சாட்சியங்களில் உள்ள மற்றும் ஆணைக்குழு அறிக்கையில் இருந்து மறைக்கப்பட்டவையாகும்.

தாக்குதலின் பிரதான சூத்திரதானி என ஒருவர் பெயரிடப்பட்டிருந்தாலும், அவரைத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கேனும் அழைக்கவில்லை.

குண்டு வெடித்த தினத்தில் ஷானி அபேசேகர என்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியே முதலில் இணைய ஐ.பி. முகவரி மூலம் தாக்குதலுடன் தொடர்புடைய நபரைக் கைதுசெய்துள்ளார்.

அதில் புலனாய்வு அதிகாரி ஒருவரும் சிக்கியுள்ளார். இது தொடர்பாக ஆணைக்குழுவில் தகவல்கள் வெளியில் வந்த போதும், அது தொடர்பான அறிக்கையில் வெளிவரவில்லை.

குறித்த அதிகாரியைக் கைது செய்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும்போது, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ‘இது எங்களின் விடயம்’ என்று கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளனர் என்று ஆணைக்குழுவில் சாட்சியங்கள் உள்ளன. ஆனால், இவை எதுவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இல்லை” – என்றார்.