சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
திறமையான அதிகார வரம்பைக் கொண்ட ஐ.நா. உறுப்பு நாடுகளை, தங்கள் நீதிமன்றங்களில் பயனுள்ள மற்றும் சுதந்திரமான குற்றவியல் மற்றும் பிற நடவடிக்கைகளை எடுக்க தாம் கோரவுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி.ரவிகுமார் தெரிவித்தார்.
மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஏற்கனவே நிறுவப்பட்ட சாட்சியங்கள் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் பரிந்துரை பொறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்த வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் துண்டாடப்பட்டு, போருக்கு முன்னும் பின்னும் அனைத்து இலங்கை அரசாங்கங்களாலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தவுள்ளது.
அத்தோடு இடைக்கால அதிகாரத்தை நிறுவி, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தை உள்ளடக்கி சர்வதேச நடுவர் செயல்முறை மூலம் அரசியல் தீர்வைக் காண்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் கோரியபடி, எந்தவொரு அரசியல் தீர்வும் உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமை மற்றும் கூட்டாட்சிக் கோட்பாடுகளின் அங்கீகாரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.