பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா 2022 தொடங்கியதில் இருந்து ஏப்ரல் 2022 வரை 968 மில்லியன் டாலர் கடனாகவும், நிதி உதவியாகவும் அளித்துள்ளது. அதாவது, நான்கு மாதங்களில் இந்த அளவுக்கு உறுதுணைபுரிந்துள்ளது இந்தியா.
இந்தியா ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு பொருளாதாரம், அறிவியல் மேம்பாடு, தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை செய்துவருகிறது. அந்த வகையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கைக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
ஆனால், 2017 முதல் 2021 வரை இலங்கையின் மிக முக்கிய நட்பு நாடாக சீனா இருந்து வந்தது. இலங்கைக்கு சீனா 947 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி விடுவித்தது. இதில் 809 மில்லியன் டாலர் சீன வளர்ச்சி வங்கி வாயிலாக கடனாக வழங்கப்பட்டது. சீனாவிடம் பெற்ற கடனை திருப்பியும் செலுத்த முடியாமல், வட்டியும் கட்ட முடியாமல் போனதுதான் இலங்கையின் நெருக்கடிக்குக் காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில்தான் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளான இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டத் தொடங்கியது. 2022 ஜனவரி தொடங்கி ஏப்ரல் 2022 வரை இந்தியா இலங்கைக்கு 968 மில்லியன் டாலர் அளவுக்கு உதவிகள் செய்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியானது 2021-ல் 610 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. இதிலும் இந்தியாவின் பங்களிப்பு 377 மில்லியன் டாலர் உள்ளது.
அண்மையில் ஐ.நா. பொதுச் சபையில் பேசிய இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் ருச்சிரா காம்போஜ், “அண்டை நாடான இலங்கைக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய 4 பில்லியன் டாலர் மதிப்பில் உதவிகளை வழங்கியுள்ளோம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் இந்தியா சார்பில் இலங்கைக்கு கடந்த ஆகஸ்டில் இருந்து 21,000 டன் உரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கையுடனான நட்புறவை வலுப்படுத்தும் செயல் என்று இலங்கைக்கான இந்திய தூதரகமும் தெரிவித்துள்ளது.
இலங்கையை நிதி நெருக்கடியால் தனது கட்டுக்குள் வைத்து அதன் கடல் பரப்பை இந்தியாவுக்கு எதிரான ஒற்று வேலைகளுக்குப் பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இப்போது இலங்கையின் ஆபத்பாந்தவனாக இந்தியா மாறியிருக்கிறது.
(செய்தி – தி இந்து)