கடந்த சில தினங்களாகவே சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிவருகின்றன. அங்கு ராணுவப் புரட்சி ஏற்பட்டிருப்பதால், நாட்டின் முழுக் கட்டுப்பாடும் சீன ராணுவத் தளபதியிடம் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன.
சீன அதிபர் ஜி ஜின்பிங், உஸ்பெகிஸ்தான் தலைநகர் சாமர்கண்ட்டில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு செப்டம்பர் 16ம் திகதி அன்று சீனாவுக்குத் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில், “ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு ஜின்பிங் நாடு திரும்பியபோது, அவரை விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர்.
அப்போதிலிருந்தே அவர் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். சீனாவின் அடுத்த அதிபராக ராணுவத் தளபதி லீ கியாமிங் பொறுப்பேற்றுக் கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கின்றன” என்று ஒரு வதந்தி பரவத் தொடங்கியுள்ளது.
சீனாவில், ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்றிருந்த சட்டத்தை, கடந்த ஆண்டு மாற்றியமைத்தார் ஜின்பிங். தனது வாழ்நாள் முழுவதும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அதிபராகவும் தானே இருந்துகொள்ளும் வகையில் ஜின்பிங் கொண்டுவந்த சட்ட மாற்றங்கள், சொந்தக் கட்சிக்குள்ளேயே புகைச்சலை உண்டாக்கியுள்ளது.
அதோடு, ஜின்பிங் தலைமையில் சீனாவில் ஊழலில் ஈடுபடுபவர்களைக் களையெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சீன அரசில் முக்கியப் பதவிகளிலிருந்த இரண்டு மூத்த அமைச்சர்களுக்கும், நான்கு முக்கிய அதிகாரிகளுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், ஜின்பிங்-க்கு எதிராகச் செயல்பட்டதால்தான், அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.