சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் கலந்து கொண்ட இலங்கை பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தை சந்தித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி குழுமம் (WBG) 2022 இன் ஆளுநர்கள் சபையின் வருடாந்த கூட்டங்கள் நேற்று (10) வாஷிங்டன் D.C இல் ஆரம்பமாகின.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் IMF/WB வருடாந்த கூட்டங்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோருடன் சிறந்த கலந்துரையாடலை மேற்கொண்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் தீவிர சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் கவனம் செலுத்தியதாக அவர் மேலும் கூறினார்.