பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவுக்கு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும் என குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க இன்று (13) தெரிவித்தார்.
உப குழுவுக்கான நிபுணத்துவ கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்று பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ ஆகியோர் கலந்துகொண்டதுடன் நாட்டின் தற்போதைய கடன் நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செயற்படும் போது ஏற்படும் கொள்கை ரீதியான நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன்கள் திணைக்களத்தின் கலாநிதி எம்.இஸட்.எம். ஆஸீம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்
போது, எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் தற்போதைய நிலைமையில் சில ஆறுதலான மாற்றங்கள் ஏற்படும் என தெரிவித்தார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு டொலருக்கு ஒப்பீட்டளவில் ரூபாவை பேணுதல், வரிகளை அதிகரித்தல், இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதித்தல் போன்ற விடயங்களால் ஏற்படும் சமூக அழுத்தம் தொடர்பில் இதன்போது குழு கவனம் செலுத்தியது. இந்த நிலைமைக்கு ஒப்பீட்டளவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் வீழ்ச்சியடைத்தல், வேலையின்மை அதிகரித்தல், வறுமை அதிகரித்தல் போன்ற விடயங்கள் காரணமாக ஏற்படும் சமூக சிக்கல்கள் தொடர்பிலும் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது இலங்கையில் குடும்பகள் தொடர்பான ஆய்வை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் நிதி அமைச்சு மற்றும் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்துக்கு அறிவித்தார். இந்த ஆய்வு மூன்று வருடங்களாக மேற்கொள்ளப்படவில்லை என்பதால் ஆய்வை மேற்கொள்வதன் மூலம் சமூக வீழ்ச்சியை புரிந்துகொண்டு எதிர்காலக் கொள்கைகளை தயாரிப்பது மிகவும் பொருத்தமானது என குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் காரணமாக எந்தவகையிலாவது அழுத்தத்துக்கு உள்ளாகும் பல துறைகள் தொடர்பிலும் கடன் ஸ்திரத்தன்மையுடன் தொடர்புடைய பிரேரணைகள் அடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் டிசம்பர் மாதத்துக்குள் முன்வைப்பதற்கு குழுவினால் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சிசிர ஜெயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் டிகிரி கே. ஜயதிலக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.