திருகோணமலை துறைமுகத்தை மூலோபாய துறைமுகமாக மாற்றியமைக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும்!

0
116
Article Top Ad

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டம் வாக்களிப்பை இலக்காகக் கொண்டதல்ல, அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் பிரகாரம் துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் குதங்கள் வளாகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் (சுர்பானா ஜுரோங் திட்டம்) தொடர்பில் திருகோணமலை ஒர்ஸ் ஹில்லில் இன்று (14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்கும் போது முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எண்ணெய் தாங்கிகளை வழங்கும் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தால் நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் தெரிவித்தார்.

கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னர், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பல இடங்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓர் மலையிலிருந்து அவதானித்தார்.

மேலும், கலந்துரையாடலின் பின்னர், திருகோணமலை காந்தி சுற்றுவட்டத்தை அண்மித்த கடற்கரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்வதற்கான உத்தேச திட்டத் தளத்தையும் ஜனாதிபதி அவதானித்தார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் குழுவையும் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தகவல்களைக் கேட்டறியவும் மறக்கவில்லை.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

அடுத்த தேர்தலுக்காக அல்ல, அடுத்த தலைமுறைக்காக இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். அடுத்தாண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் 25 ஆண்டுகள் உள்ளன. அதற்கு முன் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.

எனவே 2018-2050 திட்டங்களை 2020-2048 என்று குறைப்போம். அந்தக் காலத்தில் இந்த கிழக்கு மாகாணத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். அடுத்த 05 வருடங்களில் முடியும் என்று நான் கூறவில்லை. தொடங்க வேண்டும் என்கிறோம். நீங்கள் அங்கிருந்து செல்ல வேண்டும்.

பொலன்னறுவை தலைநகராக இருந்த போது திருகோணமலை துறைமுகம் பெரிய துறைமுகமாக இருந்தது. அன்று திருகோணமலையைச் சுற்றி வங்காள விரிகுடா வரைபடம் காட்டப்பட்டது. வங்காள விரிகுடா பகுதி இன்னும் வளர்ச்சியடையாமல் உள்ளது. அந்த வளர்ச்சியை அடைய இன்னும் 10-15 ஆண்டுகள் ஆகும். தாய்லாந்தின் வளர்ச்சி தற்போது மேற்கு நாடுகளுக்கு நிகராக வந்துள்ளது. மியான்மரில் இன்னும் தொடங்கவில்லை. வங்கதேசத்தில் தான் தொடங்கியுள்ளது. அதற்கான பணிகள் ஜாவா சுமத்ராவில் நடைபெற்று வருகிறது. அடுத்த 10-15 ஆண்டுகளில் திருகோணமலை துறைமுகம் முக்கியமானதாக மாறும். இலங்கையை துறைமுக மையமாக மாற்றுவதே எமது முயற்சியாகும்.

திருகோணமலை துறைமுகத்தை ஆழமான துறைமுகமாக மாற்ற வேண்டும். இதனை முன்னணி மூலோபாய துறைமுகமாகவும் மாற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளைத் திட்டமிடும்போது இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியா நமக்கு நெருக்கமாக இருப்பதால், அது மிகவும் முக்கியமானது.

தற்போது, ​​இந்தியாவுடன் பல திட்டங்கள் விவாதிக்கப்படுகின்றன. சம்பூர் ஆலையின் பணியை தொடர வேண்டும். இதற்கு தடையாக இருந்தால் நேரடியாக அரசின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.