அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் இன்றும், நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இரண்டு நாட்கள் இடம்பெறும் கடும் விவாதத்தின் பின்னர் நாளையத்தினம் சட்டமூலத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்நிலையில் இந்த சட்டமூலத்துக்கு ஆளும் கட்சிக்குள் இணக்கப்பாடின்மையால் கருத்து மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஜனாதிபதியின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக தாம் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் சில விடயங்கள் திருத்தப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பது பொருத்தமானது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.