“தமிழக அரசைப் போன்று தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் குரலுக்குச் செவிமடுத்தும், அரசியல் கைதிகளின் நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய துரித நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.”
– இவ்வாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புபட்டவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 30 வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இந்திய உச்ச நீதிமன்றம் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்திருப்பதை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பாராட்டுகின்றது.
இவர்களுடைய விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழக அரசு உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவிக்கின்றது.
இந்த வழக்கின் தீர்ப்பை முன் மாதிரியாகக் கொண்டேனும் இலங்கை சிறைகளில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் சமூக மயமாக்கப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்டு குறுகிய காலத்திலேயே நன்னடத்தையாளர்களாக அடையாளம் காணப்பட்டு இவர்கள் சமூகமயமாக்கப்பட்டனர்.
தொடர்ந்து அரசியல் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது அவரைக் கொலை செய்வதற்காக முயற்சித்தவர் எனப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.
அதேபோன்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி காலத்திலும் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 16 பேர் விடுவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம்.
தற்போதைய ஜனாதிபதியும் அண்மையில் சிலருக்கு விடுதலைக்கு அனுமதி அளித்திருந்தார். இதற்கு இவர்களின் நன்னடத்தையும் ஒரு காரணமாகும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது நீண்ட காலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எந்தவொரு காலகட்டத்திலும் சிறைச்சாலை நிர்வாகத்துக்கு எதிராகவோ, அரசுக்கு எதிராகவோ எதனையும் செய்யவில்லை. நன்னடத்தை மிக்கவர்களாகவே காணப்பட்டுள்ளனர்.
அரசியல் கைதிகள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி நிர்வாகத்துக்கு முன் அறிவிப்பு செய்தே பல்வேறு கால கட்டங்களில் சிறைச்சாலைப் பொருட்களுக்கோ அல்லது வேறு எதற்குமோ எந்தவிதமான சேதங்களையும் ஏற்படுத்தாது அமைதிப் போராட்டங்களையே நடத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டக் காலத்தில் சிறந்த ஒழுக்க நெறியை இவர்கள் கடைப்பிடித்துள்ளனர். தொடர்ந்து சிறைச்சாலை நிர்வாகத்தின் நன்மதிப்பைப் பெற்றவர்களாகவே உள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பலர் ஒப்புதல் வாக்குமூலமே குற்றவாளிகள் ஆக்கப்பட்டு தண்டனை அனுபவிப்பவர்களாக உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டும், தமிழக அரசைப் போன்று தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் குரலுக்குச் செவிமடுத்தும், அரசியல் கைதிகளின் நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயலும் அரசு அந்த மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளில் ஒன்றானதும் அரசியல் பிரச்சினையோடு நேரடி தொடர்புபட்டதுமான அரசியல் கைதிகளில் விடுதலை பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருதல் வேண்டும். அதுவே அரசு மீதான நம்பிக்கைக்கு வழிவகுக்கும்.
நாடு பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கும் இந்த நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் இவ்வேளையில் அதற்குத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துணை செய்யும்” – என்றுள்ளது.