கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவை கூட்ட ரெலோவும் புளொட்டும் வலியுறுத்தல்

0
102
Article Top Ad

நீண்ட காலமாக நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதானிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு இரு பங்காளிக் கட்சிகளான தமிழ் ஈழ விடுதலை இயக்கமும்(ரெலோவும்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் (புளொட்டும்) சேர்ந்து வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டவை வருமாறு:-

“பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூடுவதற்காகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பினும் அது தொடர்ச்சியாகப் பல காலம் நடைபெறாமலே இருப்பது கவலைக்குரியது.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் சீர்குலைந்துள்ளன. கருத்து வேறுபாடுகள் தோன்றுவதனால் புரிந்துணர்வு அற்ற சூழலே காணப்படுகிறது.

இதைத் தவிர அங்கத்துவக் கட்சிகளுக்கு உள்ளே ஏற்படுகின்ற பூசல்களும் முரண்பாடுகளும் அக்கட்சிகளை மாத்திரம் பாதிக்காது ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பாதகமாக உருவாகி வருகின்றது.

இந்தச் சூழ்நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாரிய நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்களினுடைய எண்ணங்களில் சந்தேகமும் குழப்பமும் தோன்றுவதை அவதானிக்க முடிகிறது.

வெளிப்படையாகவே மக்கள் கூட்டமைப்பில் நிலவும் குழப்ப சூழ்நிலைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பகிரங்கமாகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையைத் தொடர விடாமல் தடுத்து நிறுத்தவும், பாரிய தேசிய இயக்கத்தைத் தொடர்ந்து சிக்கலுக்கு உட்படுத்துகின்ற நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வரவும் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதானிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டுவது அவசியம் என்று நாம் கருதுகின்றோம்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மிக விரைவில் அதற்கான கால நேரத்தை அறியத்தருமாறும் தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.